ஆட்சியாளர் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்: அரண்மனை

ஆட்சியாளர் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்: அரண்மனை

படம்: பெர்னாமா

12 Oct 2026 - 3:02 pm

2 mins read

கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், அக்டோபர் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மலேசிய ஆட்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்பதை மாநில அரண்மனை உறுதிசெய்துள்ளது.

மாநிலத்தில் தீவிரமடைந்து வரும் அரியணைப் பூசலில் மத்திய அரசாங்கமும் ஈர்க்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இந்த முடிவு வெளிவந்துள்ளது.

துவாங்கு முஹ்ரிஸ், ஆட்சியாளர் மன்றத்தில் பங்கேற்காமல் நெகிரி செம்பிலான் மாநில விவகாரங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாக நெகிரி செம்பிலான் அரண்மனை திங்கட்கிழமையன்று (அக்டோபர் 12) அறிக்கை வெளியிட்டது.

புதன்கிழமையன்று ஜெலேபு பகுதிக்கான புதிய ‘உண்டாங்’ எனப்படும் மாவட்டத் தலைவரை அதிகாரபூர்வமாக நியமிக்கும் சடங்கு நடைபெறவுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அதிகாரபூர்வக் கூட்டங்களில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் அல்லது பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் கொண்ட நான்கு மாவட்டத் தலைவர்களில், ஜெலேபுவின் புதிய தலைவருடன் சேர்த்து மூவர் துவாங்கு முஹ்ரிசுக்கு ஆதரவானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தம்மைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தைக் கைப்பற்ற முயலும் அவரது உறவினர் நட்சருதீன் ஜஃபாரின் முயற்சிக்கு எதிராகத் தமது நிலையைப் பலப்படுத்திக்கொள்ள இந்த நியமனம் முஹ்ரிசுக்குக் கூடுதல் பலத்தை அளிக்கிறது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெறவுள்ள ஆட்சியாளர்கள் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் கலந்துகொள்வது குறித்து ஒன்பது மாநில ஆட்சியாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்றால் ஆலோசனைகளின் செல்லுபடித்தன்மை கேள்விக்குறியாகும் என்ற கவலையால் ஜூன் மாதக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் ஒன்பது மாநில சுல்தான்கள் மட்டுமே பங்கேற்கும் மன்றக் கூட்டத்துக்கு முந்தைய ஆலோசனையில் மட்டுமே தாம் கலந்து கொள்ளப்போவதாக துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்