லெபனானின் 900 ஆண்டு பழைமையான கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

லெபனானின் 900 ஆண்டு பழைமையான கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

2 mins read
6122ed22-9609-4267-99a4-c17630438716
தெற்கு லெபனானில் உள்ள பழைமையான பியூஃபோர்ட் கோட்டையை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

குலாயா (லெபனான்): இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா படையினரை துடைத்தொழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தெற்கு லெபனானில் உள்ள 900 ஆண்டு பழைமையான இடைக்கால பியூஃபோர்ட் கோட்டையை ஞாயிற்றுக்கிழமை (மே 31) இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றின.

ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான போரில் ஏற்பட்டுள்ள முக்கிய திருப்புமுனை இது என்று பிரதமர் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து லெபனானுக்குள் மேலும் முன்னேற அவர் சூளுரைத்துள்ளார்.

ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, கோட்டைக்கு அருகே உள்ள இஸ்ரேலியப் படைகளையும் தெற்கு இஸ்ரேலின் ஷலோமி, நஹாரியாவில் உள்ள ராணுவ நிலைகளையும் உள்கட்டமைப்புகளையும் குறி வைத்ததாகக் கூறியது.

இஸ்ரேல் தொடர்ந்து தெற்கு லெபனானைத் தாக்கியதில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

லெபனானில் சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலின் தாக்குதல் குறித்துப் பேச ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அரசதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்தார்.

“தெற்கு லெபனானில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது,” என்று கூறிய திரு மக்ரோன், சண்டையை முற்றிலும் நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய உச்சத் தலைவரைக் கொன்றதற்காக மார்ச் 2ஆம் தேதி இஸ்ரேல்மீது ஏவுகணைகளைப் பாய்ச்சி ஹிஸ்புல்லா படையினர் பதிலடித் தந்தனர். இதனால் மத்திய கிழக்குப் போரில் லெபனானும் இழுக்கப்பட்டது.

இந்நிலையில் லெபனானுக்கும் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே ஏப்ரல் 17ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் இருதரப்பும் இதனைக் கடைப்பிடிக்கவில்லை.

சண்டை நிறுத்தத்தை மீறுவதாக ஒன்றையொன்று தினமும் குற்றம்சாட்டியபடி தங்களுடைய தாக்குதல்களை நியாயப்படுத்தி வருகின்றன.

2000ஆம் ஆண்டுக்கு முன்பு தெற்கு லெபனானை இருபது ஆண்டுகள் ஆக்கிரமித்திருந்த காலத்தில், கலாத் அல்-சகிஃப் என்று அழைக்கப்படும் பியூஃபோர்ட் கோட்டையை இஸ்ரேலியப் படைகள் ஒரு தளமாகப் பயன்படுத்தியிருந்தன.

குறிப்புச் சொற்கள்