பெய்ரூட்: இஸ்ரேலிய ராணுவம், தென் லெபனானில் ஆகாயத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
பல்லாண்டுக்குப் பிறகு, இரு தரப்பும் நேரடியாகப் பேச்சு நடத்திய மறுநாள் இஸ்ரேல் புதிய தாக்குதலைத் தொடுத்துள்ளது.
ஆயுதக்கிடங்குகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. அந்தப் பகுதிகள் அமைந்துள்ள மியாடேல், பாராச்சிட், ஜாபா, மாரூனா நகரங்களில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். யாரும் மாண்டதாகத் தகவல் இல்லை.
சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, கிடங்குகள் செயல்பட்டதாக இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் கூறினார். இஸ்ரேலுக்கு விடுக்கப்படும் எந்த மிரட்டலையும் அகற்றத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு தரப்பும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன. 13 மாதம் ஆன நிலையிலும் இஸ்ரேல், கிட்டத்தட்ட அன்றாடம் லெபனானைத் தாக்கி வருகிறது.
அண்மைத் தாக்குதல் குறித்து லெபனானியத் தலைவர்கள் உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அவர்கள் கண்டித்துள்ளனர்.
அமெரிக்காவும் பிரான்சும் சண்டை நிறுத்த உடன்பாட்டை நடப்புக்குக் கொண்டுவர உதவின. அதன்படி, தென் லெபனானிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை மீட்டுக்கொள்ள வேண்டும். லித்தானி ஆற்றின் தென் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா அதன் குழுவினரையும் ஆயுதங்களையும் அகற்றவேண்டும். இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த ஆறு.
இந்நிலையில் டெல் அவிவுக்கும் பெய்ரூட்டுக்கும் இடையிலான அண்மை நேரடிப் பேச்சு, நல்ல சூழலில் இடம்பெற்றதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இரு தரப்புக்கும் இடையில் பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் சாத்தியம் குறித்த யோசனைகளை முன்வைக்க இணக்கம் காணப்பட்டதாகவும் அது சொன்னது.
இருப்பினும் அரசதந்திர உறவை வழக்கநிலைக்குக் கொண்டுவரும் இலக்கு அருகில் இல்லை என்றார் லெபனானியப் பிரதமர் நவாஃப் சலாம். நேரடிப் பேச்சு, பதற்றத்தைத் தணிப்பதில் கவனம் செலுத்தியதாக அவர் சொன்னார்.

