சட்டங்கள், நீதிமன்றங்கள், உதவித் திட்டங்கள் முதலானவை முக்கியம். இருந்தாலும் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள் என்ன செய்யவேண்டும் எனப் புரிந்துகொண்டு, தங்களுக்கான உதவியைப் பெற முடிகிறதா என்பதில்தான் எல்லாம் அடங்கியிருப்பதாகச் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
இத்தகையோர் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட சிக்கல்களுக்கு உரிய தீர்வு தர, ஜாமியா அமைப்பு இலவசச் சட்ட ஆலோசனைச் சேவையை வழங்குவதாக உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங் கூறினார்.
ஃபுராமா ரிவர்ஃபிரன்ட் (Furama RiverFront) ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்ற ஜாமியா அமைப்பின் இலவசச் சட்ட ஆலோசனைச் சேவையின் 50ஆம் ஆண்டுநிறைவு விழாவில் சிறப்புரை ஆற்றியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
“எனது பயணம், ஜாமியாவின் சமூகப் பணிகள், அது ஆதரிக்கும் பல்வேறு திட்டங்களோடு பல்லாண்டுகளாகப் பலமுறை இணைந்துள்ளது. ஜாமியா, சமூகத்திற்கு எவ்வளவு சேவையாற்றுகிறது என்பது ஒவ்வொரு முறையும் எனக்கு நினைவூட்டப்படுகிறது,” என்றார் அமைச்சர்.
குடும்பங்களை ஆதரிப்பது, மூத்தோரை அரவணைப்பது, பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் உதவுவது போன்ற சமூகப் பணிகளை அவ்வமைப்பு செய்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
“குறிப்பாக, இன, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஜாமியா சேவையாற்றுவதை மதிக்கிறேன். இத்தகைய சேவை ஜாமியாவின் நீண்டகால அடையாளத்தை எடுத்துக்காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
ஜாமியாவின் வரலாறு பற்றியும் விவரித்த அமைச்சர், 1949ல் அந்த அமைப்பு நடத்திய சமய நல்லிணக்க விருந்து, சமயங்களுக்கு இடையிலான ‘ஐஆர்ஓ’ அமைப்பின் உருவாக்கம் போன்றவற்றைக் குறிப்பிட்டார்.
“இதே உணர்வு, இலவசச் சட்ட ஆலோசனைச் சேவையிலும் படர்ந்துள்ளது. சொல்லப்போனால், இன, சமய நல்லிணக்கம் நம் நாட்டின் பேசுபொருளாவதற்கு முன்பாகவே, ஜாமியா பல்வேறு சமயங்களைச் சேர்ந்தோரை ஒன்றுசேர்த்து வருகிறது,” என்று அமைச்சர் கூறினார்.
கடந்த 50 ஆண்டுகளில், இந்தச் சட்ட ஆலோசனை நிலையம் 14,148 வழக்குகளைக் கையாண்டுள்ளது. 2000 முதல் 2010 வரை, சட்டக் கல்வி நிறுவனத்துடனான பணியிடப் பயிற்சித் திட்டத்தின்கீழ், 701 பயிற்சி வழக்கறிஞர்களுக்கு இது பயிற்சியளித்துள்ளது.
மக்கள் கழகத்துடன் இணைந்து சமூக மன்றங்களில் ‘ஐகவுன்சல்’ (iCounsel) எனப்படும் மெய்நிகர் மனநல ஆலோசனைச் சேவை மூலமாகவும் இந்த அமைப்பு சட்ட ஆலோசனைகளை வழங்கி வந்தது.
தற்போது இந்த நிலையத்தின் முதன்மைக் குழுவில் தன்னார்வ அடிப்படையில் இலவசச் சட்டச்சேவை வழங்கும் வழக்கறிஞர்கள் 10 பேர் உள்ளனர். மேலும், பல்வேறு வகையான வழக்குகளில் அனுபவமுள்ள புதிய, இளம் வழக்கறிஞர்களும் இப்போது அவர்களுடன் இணைந்து வருகின்றனர்.
2025 ஜூலைக்கும் 2026 ஜூலைக்கும் இடையில், இந்த மையம் மற்றும் இதனுடன் தொடர்புடைய சேவைகள் 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளன.
விவாகரத்து, பிள்ளைகள் பராமரிப்புரிமை ஆகியவை தொடர்பான இலவசச் சட்ட ஆலோசனைகள் அதிகம் நாடப்படுவதாக ஜாமியா தெரிவித்தது.
