தோக்கியோ: உலகில் முதன்முறையாகத் தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயணிகள் படகை இயக்கவுள்ளதாக ஜப்பானின் நிப்பான் அறநிறுவனம் புதன்கிழமையன்று (டிசம்பர் 10) தெரிவித்தது.
ஜப்பானில் உள்ள ஒகாயாமா, ஷோடோஷிமா தீவுக்கு இடையே அப்படகை வியாழக்கிழமை (டிசம்பர் 11) முதல் ஒலிம்பியா டிரிம் செட்டோ நிறுவனம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.
மேலும், தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அந்நாட்டின் அரசாங்கத்தின் உத்தரவுக்குக் காத்திருப்பதாகவும் அது சொன்னது.
இந்த முயற்சி ஜப்பானில் மோசமடைந்துவரும் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஓர் தீர்வாக இருக்கும் என்றும் நகரத்தைவிட்டுத் தொலைதூர தீவுகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்தை இது உறுதிசெய்யும் என அறநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மிட்சுயுகி உன்னோ கூறினார்.
நிப்பான் அறக்கட்டளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிற நிறுவனங்களை உள்ளடக்கிய தானியங்கிப் படகுகளை வணிகமயமாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி இந்தச் சோதனையோட்டம் எனக் கூறப்படுகிறது.
இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், கடல் சார்ந்த தளவாடங்களை நிலைப்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இந்தத் தானியங்கி முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

