ஒசாகா: ஜப்பானின் ஒசாகா மாநிலத்தில் நடைபெற்ற வருடாந்தரத் திருவிழாக்களின்போது தேர்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சனிக்கிழமை (அக்டோபர் 10) ஆடவர் இருவர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர்.
இஸுமிசானோ நகரில், மற்ற பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து தேரில் அமர்ந்து சென்ற 51 வயது ஆடவர் ஒருவர், தேர் தலைகீழாகக் கவிழ்ந்ததில் அதற்கு அடியில் சிக்கிக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அச்சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.
இஸுமியோட்சு நகரில் நடைபெற்ற மற்றொரு நிகழ்விலும் தேர் ஒன்று கவிழ்ந்ததில், அதற்கு அடியில் சிக்கிய 48 வயது ஆடவர் உயிரிழந்ததாக மாநிலக் காவல்துறை தெரிவித்தது.
தேர் கவிழ்ந்தபோது அவரும் அதில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார். அச்சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
‘டன்ஜிரி’ என்று அழைக்கப்படும் அந்தத் தேர்களைத் திருப்ப முயன்றபோது இரண்டு விபத்துகளும் நிகழ்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் நல்ல விளைச்சல் பெற நடத்தப்படும் வழிபாட்டுத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக, முழுக்க முழுக்க மனித ஆற்றலைக் கொண்டே அந்நகர வீதிகளின் வழியே அந்த ‘டன்ஜிரி’ தேர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றன.
தேர்கள் எங்கும் நிற்காமல் திருப்பப்படும் ‘யரிமாவாஷி’ எனும் அணிவகுப்பின் முக்கிய நிகழ்வின்போது பெரும்பாலும் அத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.
இதற்கு முன்னதாக, அக்டோபர் 3ஆம் தேதி மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மற்றொரு நகரமான சக்காயில் தேர் ஒன்று கவிழ்ந்ததில் 11 பேர் காயமடைந்தனர்.
