பாசிர் கூடாங்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மை நிலவுகிறது. கொள்கைகள் சீராக உள்ளன. நிர்வாகம் வலுவாக உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலம் 3.57 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை (800 மில்லியன் யுஎஸ் டாலர்) ஈர்த்துள்ளது.
தோட்ட, பொருள்களுக்கான அமைச்சர் ஜோஹாரி அப்துல் கனி இது குறித்த விவரங்களை வெளியிட்டார்.
பாசிர் கூடாங்கில் உள்ள ‘எக்கோசெரஸ்’ புதுப்பிக்கப்படும் எரிவாயு உற்பத்தி ஆலைக்கு நவம்பர் 24ஆம் தேதி வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்தச் சாதனை அளவு முதலீடு, மாநிலத்தின் வலுவான, நிலையான தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
இதர மாநிலங்களைவிட ஜோகூர் அதிக அளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது.
“ஓர் அரசாங்கமாக, ஓர் நிர்வாகமாக அதற்கான ஆதரவை வலுவாக வழங்கி வருகிறோம். அரசியல் நிலைத்தன்மை, தொடர்ச்சியான கொள்கைகள் போன்றவை வெற்றிகரமான முதலீட்டாளர்களை ஜோகூர் ஈர்த்துள்ளது,” என்று அவர் கூறினார்.
நவம்பர் 18ஆம் தேதி ஜோகூர் மாநில முதல்வரான ஒன் ஹஃபிஸ் காஸி, இவ்வாண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 91.1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இது, ஜோகூர் மாநிலத்தின்மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைகையைக் காட்டுகிறது. மாநிலத்தின் வலுவான ஆளுமை, உடனடியாகச் செயல்படுத்தப்படும் சேவைகள், அதிகரித்துவரும் நிபுணத்துவம் வாய்ந்த வேலைக் கலாசாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த முயற்சிகள் முதலீடுகளை ஈர்க்க பங்களித்துள்ளதாகவும் திரு ஒன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

