பத்து பகாட்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் காரில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினருக்குத் துயரம் தரும் விதமாக விபத்து ஒன்று நிகழ்ந்தது.
திங்கட்கிழமை (நவம்பர் 24) காலை ஜாலான் ஸ்ரீ பெங்கல், ஸ்ரீ காடிங் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியிலிருந்து ஒரு இரும்புத் துண்டு கழன்று வந்து கார்மீது விழுந்தது.
கிட்டத்தட்ட 100 கிலோகிராம் எடையுள்ள அந்தக் கம்பி காரின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் விழுந்தது.
காரில் இருந்த 63 வயது பயணி ஜுகாரி முரிட் காயம் காரணமாக மாண்டார். சம்பவத்தின்போது காரில் ஜுகாரியின் மனைவி, சகோதரர் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். காரை ஜுகாரியின் சகோதரர் ஓட்டியதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
லாரியிலிருந்து கழன்று வந்த இரும்புக் கம்பி ஜுகாரியின் முகத்தில் பலமாகத் தாக்கியதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜுகாரியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டி மரணம் ஏற்படுத்திய கோணத்தில் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

