தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரின் எதிர்காலத் தண்ணீர் தேவைக்கு இப்போதே ஆயத்தப் பணிகள்

2 mins read
866afcb2-be6c-47b0-bc88-2ad33ca02a11
ஜோகூர் மாநிலத்தின் தண்ணீர் தேவை போதுமானதாக இருந்தாலும், அதன் நீண்டகால தேவைக்காக இப்போதே அதற்கான ஆயத்தவேலைகளில் அம்மாநில அரசாங்கம் இறங்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: எதிர்கால தொழிலியல் பயன்பாட்டுக்கான கூடுதல் நீர் வளங்களை ஜோகூர் மாநில அரசாங்கம் தேடிக் கண்டுபிடிப்பதற்காக, ஜோகூர் சிறப்புத் தண்ணீர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ‘பெர்மோடலான் டாருல் தக்சிம்’ எனும் துணை நிறுவனத்துடன் அது இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது ஜோகூர் மாநிலத்தின் தண்ணீர்த் தேவை போதுமானதாக இருந்தாலும், அதன் நீண்டகால தேவைக்காக இப்போதே அதற்கான ஆயத்தவேலைகளில் இறங்கியுள்ளோம்,” என்று கூறினார் ஜோகூர் மாநில முதலீட்டு, பயனீட்டாளர் விவகாரம், மனிதவளக் குழுவின் தலைவர் லீ டிங் ஹான்.

ஜோகூர் சிறப்புத் தண்ணீர் நிறுவனத்தின் மூலம், புதிய நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகள், புதிய நீர் வளங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டு வர புதிய குழாய்களைப் பொறுத்துதல், புதிய நீர் வளங்களைக் கண்டுபிடித்தல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

“நிலத்தடி நீர் அல்லது கடல்நீரைக் குடிநீராக்குதல் போன்ற மாற்று வளங்களை ஜோகூர் சிறப்புத் தண்ணீர் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது,” என்றும் திரு லீ விவரித்தார்.

“ஜோகூரில் உள்ள அனைத்து தரவு நிலையங்களும் புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பத்திலும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிக்கும் வழிவகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஜோகூர் மாநில அரசாங்கம் அண்மையில், தரவு நிலையங்களின் திட்டமிட்ட மேம்பாடு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, அது ஜோகூர் மக்களுக்குப் பலன் தரும் வகையில் அமைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது,” என்றும் திரு லீ கூறினார்.

‘பிளான் மலேசியா’ எனும் ஜோகூர் நகர மற்றும் தேசிய திட்டமிடல் துறையுடன் இணைந்து ஜோகூர் மாநில அரசாங்கம், ஜோகூர் தரவு நிலைய மேம்பாட்டு திட்டமிடல் வழிகாட்டிகளை வரைந்துள்ளது. இந்த வழிமுறைகளை, மாநில அரசாங்கத் துறைகளும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் பின்பற்றி, தரவு நிலைய மேம்பாட்டுக்கான திட்டமிடலை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் பற்றி கருத்துரைத்த திரு லீ, “மலேசியாவும் சிங்கப்பூரும் அண்மையில் ஓர் அமைச்சர்நிலை கூட்டத்தை நடத்தின. இரு நாட்டு அதிகாரிகளுக்கான கூட்டுப் பயிலரங்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதன் தொடர் முயற்சியாக கூட்டு முதலீட்டு மற்றும் வர்த்தகக் கருத்தரங்குகளை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,” என்று விளக்கியதாக தி ஸ்டார் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்