ஜோகூரின் பொருளியல் செயல்திறன் மலேசியாவின் முதலிடம்

2 mins read
526594bb-a345-4ddb-b3d4-ddd7e79f6d05
கெம்பாஸ் பாரு ரயில் நிலையத்தில் (இடமிருந்து) ஜோகூர் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக். - படம்: சாவ்பாவ்

ஜோகூரின் கெம்பாஸ் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலை வரவேற்ற மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், “இந்தத் திட்டத்தின் நிறைவு, ஜோகூர் வேகமாக வளரும் மாநிலம் என்ற ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது. அதன் பொருளியல் செயல்திறன் பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களை விஞ்சியுள்ளது,” என்றார்

டிசம்பர் 4ஆம் தேதி நடந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பு குறித்தும் திரு அன்வார் பேசினார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், ஜோகூர் மாநிலத்திற்கும், அதன் அண்டை நாட்டிற்கும், மலேசியாவின் பொருளியலுக்கும் பயனளிக்கும் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

“இன்று, சிங்கப்பூர் பிரதமரிடம் நான் பேசும்போது, மலேசியாவுக்கும் ஜோகூர் மாநிலத்திற்கும் பயனளிக்கும் ஒரு போக்குவரத்து கட்டமைப்பை வழங்குவதன் மூலம் மிக முக்கியமான அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளோம் என்று தெரிவித்தேன்,” என்று திரு அன்வார் தமது உரையில் கூறினார்.

“நமக்கு மேம்பட்ட விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து கட்டமைப்புகள் தேவை. இன்று, ஜோகூரில் அடிப்படை உள்கட்டமைப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்,” என்றும் மலேசியப் பிரதமர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், “ஜனவரி மாதத்தில் இரண்டு வழித்தடங்களிலும் மேலும் இரண்டு சேவைகள் சேர்க்கப்படும். அடுத்த மாதத்தில் அதிகப் பயணங்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.

மலேசியப் போக்குவரத்து அமைச்சு, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் டீசல் இயந்திரங்களைப் பயன்படுத்தி, ஜோகூர் மாநிலத் தலைநகருக்கும் சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கூலாய் மாவட்டத்திற்கும் இடையே ஒரு பயணிகள் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டிசம்பர் 11ஆம் தேதி அமைச்சர் லோக் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்