அக்வாரா, நைஜீரியா: கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அதிகாலை, மத்திய நைஜீரியாவில் உள்ள செயின்ட் மேரீஸ் கத்தோலிக்கப் பள்ளி தங்குவிடுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்டனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்துள்ள மிக மோசமான கடத்தல் இது என்று அறியப்படுகிறது.
அன்றைய நாள் தம் கணவருடனும் இரு பிள்ளைகளுடனும் உறங்கிக்கொண்டிருந்த அப்பள்ளி ஆசிரியை மார்த்தா மத்தாயஸ், வளாகத்திலிருந்து கேட்ட பலத்த சத்தத்தால் திடுக்கிட்டு எழுந்தார்.
துப்பாக்கிக்காரர்கள், அவரது கணவரை வெளியில் வரச்சொன்னார்கள். அவர் வெளியில் வந்ததும் அவரின் கைகள் கட்டப்பட்டன. அதனைக் கண்ட அவரது மகள் பயத்தில் அழத்தொடங்கினார். அச்சமயம், கடத்தல்காரர்களில் ஒருவன், குழந்தையின் வாயில் துப்பாக்கியை வைத்து, அழுகையை நிறுத்தாவிட்டால் அவளைச் சுடப்போவதாக மிரட்டினான்.
ஆசிரியை மார்த்தாவின் கணவர், 12 பள்ளி உறுப்பினர்கள் ஆகியோர் 253 மாணவர்களுடன் கடத்தப்பட்டனர். அவர்களின் இருப்பிடம் செவ்வாய்க்கிழமைவரை (நவம்பர் 25) தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடத்தல்காரர்களிடம் இருந்து 50 மாணவர்கள் தப்பிவிட்டதாக நைஜீரிய கிறிஸ்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. பள்ளி ஊழியர்களையும் மாணவர்களையும் தேடும் பணியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் கூறியுள்ளது.
பள்ளியின் ஆசிரியர் - பெற்றோர் சங்கத் தலைவர் இமானுவல் பாலா உள்ளிட்ட பல பெற்றோர்கள், தப்பிய பிள்ளைகளை இதுவரையில் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த அதே நாளில் வடமேற்கில் உள்ள கெபி மாநிலத்தில், மற்றொரு பள்ளியில் 25 மாணவியரும் மத்திய நைஜீரியாவின் குவாரா மாநிலத்தின் ஒரு தேவாலயத்தில் 38 பேரும் கடத்தப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் போலா டினிபு, குவாரா மாநில தேவாலயத்தில் கடத்தப்பட்ட 38 பேரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். கடத்தப்பட்டு இன்னும் பிணையில் உள்ள அனைவரையும் விடுவிக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பாதுகாப்பை மேம்படுத்த மேலும் 30,000 காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்த அதிபர் போலா ஆணை பிறப்பித்துள்ளார். வடக்கு நைஜீரியாவில் தனிமையில் இயங்கும் பல பள்ளிகளைக் குற்றக்கும்பல்கள் குறிவைப்பதால் அவை மூடப்பட்டுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டில் சிட்புக் பகுதியில் 276 பள்ளி மாணவிகளை பிணைத் தொகைக்காக தீவிரவாதிகள் கடத்திய சம்பவம் உலகை உலுக்கியது.

