ர‌ஷ்யப் போரில் ஈடுபட்ட வடகொரிய வீரர்களுக்கு கிம் ஜோங் உன் பாராட்டு

2 mins read
f1d2136c-e31f-426b-8aea-304abf2ed335
ராணுவச் சீருடையில் வந்த வீரர்களை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அரவணைத்துக் கொண்டார். - படம்: இபிஏ

சோல்: ர‌ஷ்யாவில் சேவையாற்றிவிட்டு நாடு திரும்பிய வடகொரிய ராணுவப் பொறியாளர் பிரிவு வீரர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கலந்துகொண்டுள்ளார்.

கொரிய மக்கள் ராணுவத்தின் 528வது பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளையும் வீரர்களையும் திரு கிம் பாராட்டியதாக கேசிஎன்ஏ நாளேடு சொன்னது.

120 நாள் வெளிநாட்டில் சேவையாற்றும்படி ஆளம் பாட்டாளிக் கட்சி விதித்த உத்தரவை வீரர்கள் நிறைவேற்றியதாகத் திரு கிம் சொன்னார்.

ராணுவச் சீருடையில் வீரர்கள் போர் விமானத்திலிருந்து வெளியில் இறங்குவதைக் காட்டும் காணொளியில் வீரர்களை வரவேற்ற திரு கிம், அவர்களை அரவணைத்துக்கொண்டதையும் காட்டியது.

உக்ரேன்மீதான படையெடுப்பின்போது ர‌ஷ்யாவின் கர்ஸ்ட் வட்டாரத்தில் உள்ள போர், பொறியியல் பணிகளை மேற்கொள்ள வடகொரிய வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

உக்ரேனின் முக்கிய ஆக்கிரமிப்பை முறியடித்த வடகொரிய வீரர்கள் குறிப்பிட்ட அந்த வட்டாரத்தில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முக்கிய பங்கு வகிப்பதாக ர‌ஷ்யத் தற்காப்பு அமைச்சு நவம்பரில் குறிப்பிட்டது.

ர‌ஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான இருதரப்புத் தற்காப்பு உடன்பாட்டின்கீழ் வடகொரியா கடந்த ஆண்டு ஏறக்குறைய 14,000 வீரர்களை ர‌ஷ்யாவுக்கு ஆதரவாகப் போர் புரிய அனுப்பிவைத்தது.

அதில் ஏறக்குறைய 6,000 வடகொரிய வீரர்கள் மாண்டதாக தென்கொரியா, உக்ரேன், மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்தன.

எனினும், ர‌ஷ்யாவிலிருந்த ஒன்பது பேர் மாண்டதாகத் திரு கிம் சொன்னார். அவர்களின் மரணம் பேரிழப்பு என்றார் அவர். அதையடுத்து வீரர்களின் படை சுதந்திரம், விடுதலை ஆகியவற்றுக்கான உன்னத விருது பெறும் என்று திரு கிம் அறிவித்தார்.

ர‌ஷ்யாவில் உள்ள அபாயம் நிறைந்த பகுதிகளை வடகொரிய வீரர்கள் பாதுகாப்பாக்கியுள்ளனர் என்றும் பாட்டாளிக் கட்சிமீதான தங்கள் பற்றை வெளிப்படுத்தினர் என்றும் திரு கிம் மேலும் மெச்சினார்.

ர‌ஷ்யப் போரில் சண்டையிட்ட தன் நாட்டு வீரர்களை வடகொரியா அண்மை நாள்களாக வெளி அரங்கில் பாராட்டி வருகிறது.

குறிப்புச் சொற்கள்