சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அந்நாட்டின் போர்க்கப்பல்களில் ஒன்றை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
5,000 டன் எடைகொண்ட இந்த டிஸ்ட்ரோயர் வகை போர்க்கப்பல் “எதிரிகளின் சீண்டல்களுக்கு தண்டனை அளிக்கக்கூடியது,” என்று திரு கிம் கூறியதாக வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் திங்கட்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தது.
சோ ஹியோன் என்ற பெயரைக் கொண்ட இக்கப்பல், வடகொரியாவிடம் இருக்கும் இரண்டு 5,000 டன் டிஸ்ட்ரோயர் கப்பல்களில் ஒன்று. இரு போர்க்கப்பல்களும் இவ்வாண்டு வெளியிடப்பட்டவை.
நாட்டின் கடற்படைகளின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் திரு கிம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த போர்க்கப்பல், வடகொரிய ஆயுதப் படைகள் மேம்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் தெளிவான எடுத்துக்காட்டு என திரு கிம் வகைப்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) இந்த போர்க்கப்பலுக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் அவ்வாறு சொன்னதாக கேசிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.
“நமது கடற்படைகளின் மிகச் சிறப்பான ஆற்றலை நமது சுய ஆட்சி முறைக்கு மிரட்டல் விடுக்கும் எதிரிகளின் சீண்டிப் பார்க்கும் நடவடிக்கைகளை முழுமையாகத் தவிர்க்கவோ தடுக்கவோ பரந்த பெருங்கடல் பகுதியில் பயன்படுத்தவேண்டும்,” என்று திரு கிம் கூறினார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் இதேபோன்ற மூன்றாவது டிஸ்ட்ரோயர் போர்க்கப்பலை உருவாக்கப்போவதாக திரு கிம் உறுதியளித்தார்.
சோ ஹியோன், ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான வடகொரியத் துருப்புகளை ஈடுபடுத்துவதற்குக் கைமாறாக அவ்வாறு ரஷ்யா உதவியிருக்கலாம் என்று தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.
அணுவாயுத சக்தி நாடான வடகொரியாவின் ராணுவ மிரட்டல்களுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள உதவும் நோக்கில் அமெரிக்கா, தென்கொரயாவில் கிட்டத்தட்ட 28,500 துருப்புகளை நிறுத்தி வருகிறது. மேலும், தனது தற்காப்புப் பங்காளிகளான தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றுடன் அமெரிக்கா சென்ற மாதம் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தியது.