கோலாலம்பூர்: மலேசியாவில் நெடுநாள் காத்திருந்த கோலாலம்பூர் - ஜோகூர்பாரு விரைவு ரயில் சேவையின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 11) காலை தொடங்கியது.
ஊடகங்களுக்காக இந்த சிறப்பு ரயில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) முதல் இச்சேவை அதிகாரபூர்வமாகத் தொடங்கும்.
வழக்கமாக பேருந்து அல்லது வாகனங்களில் இவ்விரு நகரங்களுக்குச் செல்ல ஐந்து முதல் ஏழு மணிநேரம் ஆகலாம். இந்த ரயில் சேவை அதனை நாலரை மணி நேரமாகக் குறைக்கிறது.
சேவையின் தொடக்கத்தை முன்னிட்டு 30 விழுக்காடு சிறப்புக் கட்டணக் கழிவு, முதல் 5,000 பயணிகளுக்கு வழங்கப்பட்டது. அவை அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு தீர்ந்துவிட்டன.
மலேசிய தேசிய ரயில் போக்குவரத்துக் கழகம் (KTMB) இந்தச் சேவைக்கு நல்ல வரவேற்பை எதிர்பார்க்கிறது. குறிப்பாக, பள்ளி விடுமுறை காலத்தை முன்னிட்டு உள்நாட்டு மக்களையும் சிங்கப்பூரிலிருந்து வரக்கூடிய பயணிகளையும் இந்தச் சேவை அதிகம் ஈர்க்கும் என்பது நம்பிக்கை.
வியாழக்கிழமை கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட மின்ரயில் ஜோகூர்பாருவில் உள்ள கெம்பாஸ்பாரு ரயில் நிலையத்தை காலை 10 மணிக்கு அடைந்தது. அங்கு ஜோகூர் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் சேவையின் நிறைவு மற்றும் செயல்பாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
தலைநகரில் காலை 6.00 மணிக்கு தொடங்கிய பயணத்தில் மலேசியப் போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய ரயில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஊடகத்தினருடன் பயணத்தில் இணைந்துகொண்டனர்.
கோலாலம்பூரில் இருந்து ஜோகூர் வரையிலான மின்ரயிலின் பயணத்தின் தூரம் 192 கிலோ மீட்டர் ஆகும். மின்சாரத்தில் இயங்கும் இரண்டு தண்டவாளங்கள் ரயில்பாதையில் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
புதிய ரயில் வண்டிகளின் ஆறு பெட்டிகளில் 312 பயணிகள் அமரலாம். ஐந்து வழக்கநிலை பெட்டிகளுடன் ஒர் வர்த்தகப் பிரிவும் (பிஸ்னஸ் கிளாஸ்) அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கையிலும் மின்னூட்டு வசதிகளும் உணவுச் சேவையும் வழங்கப்படுகிறது.
கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல் வழித்தடத்தில் தினமும் நான்கு சேவைகள் இருக்கும். கேஎல் சென்ட்ரலில் இருந்து இரண்டு புறப்பாடுகள் (காலை 7.45; மாலை 5.35). ஜேபி சென்ட்ரலில் இருந்து இரண்டு சேவைகள் (காலை 8.40; மாலை 4.20). ஜனவரி 1, 2026 முதல், கேஎல் சென்ட்ரலில் இருந்து முதல் சேவை காலை 7.55 மணிக்குப் புறப்படும்.

