வாழும் காலம் நீண்டாலும் நோயில்லா வாழ்க்கை தடுமாறுகிறது: உலக சுகாதார நிறுவனம்

வாழும் காலம் நீண்டாலும் நோயில்லா வாழ்க்கை தடுமாறுகிறது: உலக சுகாதார நிறுவனம்

கோப்புப் படம்: நியூஸ்18

14 Oct 2026 - 5:53 am

3 mins read

கொவிட்-19 என்னும் பெருந்தொற்று உலகை ஆட்டிப் படைத்தபோது மக்களின் ஆயுட்காலம் சரிந்தது.

அந்தப் பெருந்துயர் ஒழிந்த பின்னர் நான்காண்டுகளில் உலக மக்களின் ஆயுட்காலம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பியது.

பெருந்தொற்று பரவத் தொடங்கிய 2019ஆம் ஆண்டில் சராசரி ஆயுட்காலம் 73.4 ஆண்டுகளாக இருந்தது. 2021ஆம் ஆண்டு அது 71.5 ஆண்டுகளாகச் சரிந்தது.

தொற்று மறைந்த பின்னர் உலகளாவிய சுகாதாரச் சூழல் மாற்றம் கண்டதன் விளைவாக, 2023ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 73.3 ஆண்டுகள் என முந்தைய நிலைக்கு அருகில் சென்றது.

ஆயுட்காலம் படிப்படியாக மீண்டு வந்தாலும், உலக மக்கள் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்கிறார்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆயுட்காலத்திற்கும் சுகாதாரமான வாழ்க்கைக்கும் இடையிலான உடல்நலப் பிரச்சினைகளை அது சுட்டிக்காட்டி உள்ளது.

2019 முதல் 2022 வரை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றும் கொவிட்-19 நோயால் மரணங்கள் நிகழ்ந்தது பழைய கதையாகிப் போனது.

தற்போது நிகழும் மரணங்களில் பெரும்பாலானவை தொற்றா நோய்களால் நிகழ்பவை என்கிறது அந்த அமைப்பு.

இதய நோய், சர்க்கரை நோய், மறதிநோய், மனநலப் பிரச்சினைகள், போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து, புதிய சவால்களை உருவாக்கியுள்ளதாக அது வெளியிட்டிருக்கும் தரவுகள் உணர்த்துகின்றன.

‘உலகச் சுகாதார மதிப்பீடுகள்’ என்னும் பெயரில் அது வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை, 2000ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் சுகாதார நிலையையும் மரணத்திற்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறது.

உலகளாவிய சுகாதாரம் மீண்டு வருகிறது, ஆனால் முழுமையான முன்னேற்றம் இன்னும் எட்டப்படவில்லை என்கிறது அந்த ஆய்வறிக்கை.

“இந்த மீட்சி பொதுச் சுகாதாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். எனினும், மனிதர்கள் நோய்களால் அதிகம் பாதிக்கப்படாமல், சுகாதாரமாக வாழும் ஆண்டுகளின் எண்ணிக்கை மிகவும் மெதுவாகவே மீண்டு வருகிறது.

“உலகளாவிய உயிரிழப்புகளுக்குத் தொற்றா நோய்களே தொடர்ந்து முக்கியக் காரணமாக இருக்கின்றன,” என்றும் அது குறிப்பிடுகிறது.

நோய்களின் பிடியில் சிக்காத சுகாதாரமான வாழ்க்கையின் ஆயுட்காலம் 2023ஆம் ஆண்டு 62.8 ஆண்டுகளை எட்டியது. ஆயினும் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைவிட அது 0.4 ஆண்டு குறைவு.

அதே நேரத்தில், தொற்றா நோய்களால் ஏற்படும் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

2000ஆம் ஆண்டில் உலகளாவிய உயிரிழப்புகளில் 58 விழுக்காடாக இருந்த தொற்றா நோய்களின் பங்களிப்பு, 2023ஆம் ஆண்டில் 74 விழுக்காடாக கூடியுள்ளது.

2023ஆம் ஆண்டில் உலகில் பதிவான மரணங்களுக்கான பத்து காரணங்களில் எட்டு, தொற்றா நோய்கள் ஆகும்.

இந்த மாற்றம் எல்லா வருமானப் பிரிவையும் சேர்ந்த நாடுகளிலும் தெளிவாகப் புலப்படுகிறது.

2023ஆம் ஆண்டில், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில்கூட தொற்றுநோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் பாதியைக் காட்டிலும் குறைந்து, தொற்றா நோய் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் கூடின.

இது உலகளாவிய நோய் பரவல் மாற்றத்தில் மற்றொரு முக்கியப் படி.

“அதிக காலம் வாழ்வது பொதுச் சுகாதாரத் துறையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று,” என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தரவு, மின்னிலக்க சுகாதாரம், பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அலைன் லேப்ரிக்.

“மக்களின் மாறுபட்ட சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார அமைப்புகளைத் தயார்படுத்தும் நிலை உள்ளது. அதே வேளை, நல்ல சுகாதாரத்துடன் கூடுதல் ஆண்டுகள் மக்கள் வாழ்வதை உறுதிசெய்வதும் சவாலான ஒன்று,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உலக சுகாதார நிறுவனம்ஆயுள்நோய்