மலேசியா: வரவுசெலவுத் திட்டம் 2027க்கு 460 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கத் திட்டம்

மலேசியா: வரவுசெலவுத் திட்டம் 2027க்கு 460 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கத் திட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

09 Oct 2026 - 9:14 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் 2027ஆம் நிதியாண்டிற்காக 459.8 பில்லியன் ரிங்கிட் ($112.48 பில்லியன்) மதிப்பிலான மிதமான விரிவாக்க வரவுசெலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) முன்மொழிந்தது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்துள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், தேர்தல் நெருங்குவதையொட்டி மலேசிய அரசாங்கம் தனது செலவினங்களை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் போரினால் எரிபொருள் விலை உயர்ந்து, நாட்டின் மானியச் செலவு அதிகரித்துள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 விழுக்காட்டிலிருந்து 3.6 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நடுத்தர கால நிதி இலக்குகளை எட்டுவதில் மலேசியா உறுதியாக உள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். 2027ல் நிதிப் பற்றாக்குறை 3.3 விழுக்காடாகக் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பொருளியல் 2027ல் 4.2 முதல் 5.2 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான பொருளியல் வளர்ச்சி 4.8 முதல் 5.3 விழுக்காடு வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 முற்பாதியில் மலேசியப் பொருளியல் 5.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. 2027ல் பணவீக்கம் 1.8 முதல் 2.8 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2027ஆம் ஆண்டுக்கான செலவினத்தில் மேம்பாட்டுச் செலவினங்களுக்காக 83 பில்லியன் ரிங்கிட்டும், செயலாக்கச் செலவினங்களுக்காக 376.8 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. வருவாய் 4.7 விழுக்காடு அதிகரித்து 380.8 பில்லியன் ரிங்கிட்டாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெட்ரோனாஸ் நிறுவனம் 2027ல் அரசாங்கத்திற்கு 32 பில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கும்.

வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க வரிச் சலுகைகளையும் ரொக்க உதவிகளையும் பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாதத்திற்கு 1,700 ரிங்கிட்டாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் ஊதியச் சீர்திருத்தம் அவசியம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவரவுசெலவுத் திட்டம்அன்வார் இப்ராகிம்நிதியமைச்சர்அறிக்கை