மலேசியாவில் உயிரை மாய்த்துக்கொண்டோரில் 80 விழுக்காட்டினர் ஆடவர்கள்

2 mins read
b3c1213b-e394-4428-b571-696137490038
உயிரை மாய்த்துக்கொண்ட ஆடவர்களில் பெரும்பாலானோர் இளையர்கள் மற்றும் வேலை செய்யும் பெரியவர்கள். - படம்: stock.adobe.com

புத்ராஜெயா: மலேசியாவில் 2020ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டு அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட 5,857 பேரில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் ஆடவர்கள் என்று அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை மலேசிய நாளிதழ் ஹரியான் மெட்ரோ வெளியிட்டது.

உயிரை மாய்த்துக்கொண்ட ஆடவர்களில் பெரும்பாலானோர் இளையர்கள் மற்றும் வேலை செய்யும் பெரியவர்கள்.

உயிரை மாய்த்துக்கொண்டோரில் 1,813 பேர் 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

வியாழக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற கலந்துரையாடலின்போது இத்தகவல்களைக் காவல்துறை வெளியிட்டதாக ஹரியான் மெட்ரோ கூறியது.

மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹேன்னா யோ, கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

பல உயிர் மாய்ப்புச் சம்பவங்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் உயிரை மாய்த்துக்கொள்வோர் பற்றி ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிட்டால் அதே போன்ற முடிவை மற்றவர்களும் தேடிக்கொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“உயிரை மாய்த்துக்கொள்வோர் தொடர்பான துல்லியமான எண்ணிக்கை எங்களிடம் இல்லை. பல உயிர் மாய்ப்புச் சம்பவம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பதிவு செய்யப்பட்டுள்ள உயிர் மாய்ப்புச் சம்பவங்களில் பெரும்பாலானவை ஆடவர்களுடன் தொடர்புடையவை,” என்று திருவாட்டி யோ கூறினார்.

மற்றவர்களுக்குத் தங்கள் பிரச்சினைகள் தெரியவந்துவிடும் என்ற அச்சத்தில் உதவி தேவைப்படும் இளையர்கள் அதை நாடத் தயங்குவதாக அவர் தெரிவித்தார்.

“ஆலோசகர்களைப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறோம். ஆனால் பாதிப்புக்கு உள்ளாகும் பலர் வேலை செய்யும் இளையர்கள் என்று தரவுகள் காட்டுகின்றன. இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முதலாளிகளுக்கும் பயிற்சி தேவை,” என்று அமைச்சர் யோ கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமான உயிர் மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, ஜோகூர், கோலாலம்பூர், பினாங்கு ஆகிய இடங்களில் பலர் உயிரை மாய்த்துக்கொண்டதாக ஹரியான் மெட்ரோ குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்