கோலாலம்பூர்: மலேசியா அதன் அணுசக்தி கட்டுப்பாட்டுக் கட்டமைப்பைத் திருத்தியுள்ளது.
அணுசக்தியுடன் தொடர்புடைய பொருள்களை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது போன்றவற்றுக்கான அனுமதியைப் பெற இந்தக் கட்டமைப்பு அவசியம்.
திருத்தப்பட்ட சட்டம் திங்கட்கிழமையிலிருந்து (டிசம்பர் 1) நடப்புக்கு வந்துள்ளது.
அது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்டவும் மலேசியா முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அணுசக்தியைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளைக் கண்டறிய மலேசியா ஆய்வு நடத்தி வருகிறது.
ஊழியர்கள், பொதுமக்கள், சுற்றுப்புறத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கான மேற்பார்வை, கட்டுப்பாட்டுக்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த மலேசியா மேற்கொள்ளும் இந்நடவடிக்கை இலக்கு கொண்டுள்ளது.
இத்தகவலை மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 2) கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அணுசக்தியுடன் தொடர்புடைய பொருள்களை அல்லது தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் இனி அனுமதி தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அணுசக்தி தொடர்பான சதி வேலை, விதிமீறல் போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகளிலிருந்து 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.

