கோலாலம்பூர்: மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் சுத்தமான கழிவறைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே வர்த்தக உரிமம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுத்தம் தொடர்பில் குறைந்தபட் தரநிலைகளைப் பூர்த்திசெய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளூர் அதிகாரிகள் வர்த்தகம் செய்ய அனுமதி தரும் உரிமத்தை வழங்குவர் என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய விதிமுறை கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சர் கா கோர் மிங் தெரிவித்தார். நாட்டில் பொதுச் சேவைகளின் நற்பெயரை உயர்த்தவும் கழிவறைகளின் தரத்தை மேம்படுத்தவும் வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சு எடுக்கும் முயற்சிகளில் இந்நடவடிக்கை அடங்கும்.
“பிபிடி (PBT) பிரிவுகளின்படி இந்த விதிமுறை கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும். முதலில் 2026ல் நகர மன்றங்களிலும் 2027ல் நகராட்சி மன்றங்களிலும் 2028ல் மாவட்ட மன்றங்களிலும் செயல்படுத்தப்படும்.
“இதன் மூலம் கழிவறைகளுக்கான ‘பிஎம்டபிள்யு’ தரநிலை (சுத்தமான, ஈர்ப்புத் தன்மைகொண்ட, வாசனையான கழிப்பறைகள்) தேசிய அளவில் இயல்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வது இலக்கு. அதோடு, குறிப்பாக ‘2026 மலேசியச் சுற்றுப்பயண ஆண்டு’ இயக்கத்தை முன்னிட்டு இக்காலகட்டத்துக்கு இது பொருந்தும்,” என்று திரு கா கோர் மிங் விவரித்தார்.
இவ்வாண்டுக்கான ஆகச் சிறந்த கழிவறைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார். அந்நிகழ்ச்சி தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வெஸ்ட்டின் கோலாலம்பூர் ஹோட்டலில் புதன்கிழமை (நவம்பர் 19) நடைபெற்றது.
அடுத்த ஆண்டு முதல் புதிய தரநிலைகளைப் பின்பற்றினால்தான் 10 ஆண்டுகள் கழித்து பண்டிகைக் காலங்களில் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்த நீண்ட வரிசைகள் இல்லாமல் இருக்கும் என்று அமைச்சர் சுட்டினார்.
சென்ற ஆண்டிலிருந்து மூவாண்டு காலத்துக்கு நாடு முழுவதும் உள்ள பொதுக் கழிவறைகளைப் பழுதுபார்த்து மேம்படுத்த அரசாங்கம் 180 மில்லியன் ரிங்கிட் (56.36 மில்லியன் வெள்ளி) தொகையை ஒதுக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

