கோலாலம்பூர்: மலேசியாவில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு நிதியுதவியும் சுகாதாரப் பராமரிப்பு உதவியும் வழங்கும் ‘மெடிஅசாஸ்’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைமுக அல்லது அநியாயக் கட்டணங்கள் இல்லாத வெளிப்படையான செலவுக் கட்டுப்பாட்டின் மூலம், அந்தத் திட்டம் நடுத்தர வருமானம் பெறுவோருக்குப் பாதுகாப்பை வழங்கும் என்று மலேசியச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது சொன்னார்.
“தற்போது, தனியார் காப்பீட்டுச் சந்தாக்களைச் செலுத்த முடியாததால் மொத்தம் 340,000 சந்தாதாரர்கள் தங்கள் தனியார்க் காப்பீட்டுத் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர். மேலும் அதிகமான மக்கள் அரசு மருத்துவ வசதிகளை நாடிச் செல்கின்றனர். எனவே, அமைச்சு அந்த நிதிப் பாதுகாப்பு வலையை உருவாக்க முன்வந்துள்ளது,” என்று டாக்டர் ஸுல்கிஃப்லி விளக்கம் அளித்தார்.
மருத்துவச் சிகிச்சைகளை நாடும் குடிமக்களில் ஒருவர்கூட வறுமையில் தள்ளப்படக்கூடாது என்ற அவர், மதானி சுகாதார நிதிப் பாதுகாப்புத் திட்டம், ஒரு மலிவான அடிப்படைப் பாதுகாப்புத் திட்டத்தை வழங்குகிறது என்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத இறுதியிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘மெடிஅசாஸ்’ முன்னோடித் திட்டத்தின் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் மாதாந்திர நிதிச் சுமையைக் குறைக்க ஊழியர் சேம நிதியின் இரண்டாம் கணக்கு நிதியைப் பயன்படுத்தி தவணை செலுத்த முடியும் என்று ஸுல்கிஃப்லி கூறினார்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பொறுத்தவரை, எலும்பு மாற்று அறுவை சிசிச்சை, இதய ‘ஸ்டென்ட்’ போன்ற அதிக விலையுள்ள மருத்துவக் கருவிகளுக்கான செலவை உள்ளடக்கும் வகையில், மருத்துவ உதவி நிதிக்கான ஒதுக்கீடு 40 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 விழுக்காடு உயர்த்தப்பட்டு 60 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மேலும், நடுத்தர வருமானப் பிரிவினருக்கான ‘பெடுலி கெசிஹாதான்’ திட்டத்திற்கு அரசாங்கம் 80 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, 85 வயது வரையிலான நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ‘மெடிஅசாஸ்’ திட்டம், தனியான மருத்துவக் காப்பீடு, தக்காஃபுல் பாதுகாப்புத் திட்டமாக வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்திருந்தது.
அதில் ‘மெடிஅசாஸ் தெராஸ்’, ‘மெடிஅசாஸ் பிளெக்சி’ என இரு தேர்வுகள் அடங்கும்.
