சலுகை பெட்ரோல்: வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களைத் தண்டிக்க மலேசியாவில் கோரிக்கை

2 mins read
905833db-b36b-424f-8c08-349056622090
RON95 பெட்ரோல் மலேசிய குடிமக்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: சலுகை விலை பெட்ரோலை வாங்கும் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என மலேசிய பெட்ரோல் விநியோகிப்பாளர்கள் சங்கம் (PDAM) வலியுறுத்தி உள்ளது.

மலேசிய குடிமக்களுக்காக சலுகை விலையில் விநியோகிக்கப்படும் RON95 பெட்ரோலை வெளிநாட்டு வாகனங்கள் வாங்கி நிரப்பினால், அதனை விற்றவருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் வரை (S$307,000) அபராதம் அல்லது மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், அந்த பெட்ரோலை வாங்கிய வெளிநாட்டு வாகனங்கள் தண்டனை எதுவுமின்றி தப்பிவிடுகின்றன.

அதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், வெளிநாட்டு வாகனங்களில் சலுகை விலை பெட்ரோலை நிரப்புவது சட்டவிரோதம் என அறிவித்து அதனை வாங்கிய வெளிநாட்டு வாகன ஓட்டுநர் குற்றவாளி என கருதப்பட வேண்டும் என்று சங்கம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் ஊடகப் பிரிவு செயலாளர் கோர்டன் லிம் கூறுகையில், பெட்ரோல் நிலையங்களில், வரிசையின் கடைசியில் உள்ள சலுகைவிலை பெட்ரோலை நிரப்பிவிட்டு, கட்டணத்தை கடன்பற்று அட்டை வாயிலாகச் செலுத்திவிட்டு வேகமாக வெளியேறிவிடும் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களை கண்டுபிடிப்பது கடினம் என்றார்.

“இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோல் விற்பனையாளர்களைத் தண்டிப்பதில் நியாயமில்லை. சலுகை விலை பெட்ரோலை வெளிநாட்டு வாகனங்களுக்கு விற்க எந்த விற்பனையாளரும் விரும்ப மாட்டார்கள்.

“அந்த விற்பனையில் அவர்களுக்குக் கிடைக்கும் லாபமும் சொற்பம்தான். எனவே, அவர்கள் சட்டத்தை மீறுவார்கள் என்று சொல்ல முடியாது.

“சலுகை விலை பெட்ரோலை வாங்கும் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் தண்டிக்கப்படாத வரை அவர்கள் அந்தச் செயலைத் தொடரக்கூடும்,” என்றார் திரு லிம்.

குறிப்புச் சொற்கள்