ஆளில்லா வானூர்தி மூலம் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க மலேசியா திட்டம்

ஆளில்லா வானூர்தி மூலம் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க மலேசியா திட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

18 Oct 2026 - 12:03 pm

2 mins read

புத்ராஜெயா: மலேசியாவில் தொலைதூரப் பகுதிகளுக்கு மருத்துவப் பொருள்கள், ரத்த மாதிரிகள், மற்ற அவசரச் சரக்குகளை ஆளில்லா வானூர்திகள் மூலம் விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

நாட்டின் குறைந்த உயரத்திற்குப் பறக்கக்கூடிய வான்வழிப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இத்தகைய சரக்குச் சேவைகளைத் தோட்டங்கள், தீவுகள், கடலோரத் தளங்களில் பயன்படுத்த முடியும் என்று மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாகி நோரஸ்மான் முகம்மது தெரிவித்துள்ளார். த ஸ்டார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், புவியியல் அமைப்பின் அடிப்படையில் இதற்குரிய சரியான நேரம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மருத்துவப் பொருள்களையும் ரத்த மாதிரிகளையும் விநியோகிக்கும் முதற்கட்டச் சோதனைகளை ஆணையம் ஏற்கெனவே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. குறிப்பாக, சாபா, சரவாக் போன்ற பகுதிகளில் 500 கிலோகிராம் வரை எடையைச் சுமந்து செல்லும் திறன்கொண்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று திரு நோரஸ்மான் கூறினார்.

மலேசியப் போக்குவரத்து அமைச்சின்கீழ் இயங்கும் ஆணையம், நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து சார்ந்த அனைத்து முக்கிய விவகாரங்களையும் மேற்பார்வையிடுகிறது.

தொடக்கக் கட்டத்தில் பொட்டலங்கள், மருத்துவப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படலாம். இருப்பினும், ஒவ்வொரு முன்மொழிவும் விமானத்தின் திறன், பயணிக்கும் தூரம், இயக்கச் சூழல், பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையில் துல்லியமாக மதிப்பிடப்படும் என்று ஆணையம் கூறியது.

குறைந்த உயரத்திற்குப் பறக்கூடிய வான்வழிப் பயன்பாடு, 2026-2030 மலேசியப் பொருளியல் வரைவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசாங்க அமைப்புகள், தொழில்துறைப் பங்காளிகள், உள்கட்டமைப்பு அமைப்புகளுக்கு வழிகாட்டுவதே இதன் நோக்கம். இந்த வரைவுத் திட்டம் குறித்துப் பொதுமக்கள் தொடர்ந்து கருத்துகளைக் கூறலாம்.

குறிப்புச் சொற்கள்
ஆளில்லா வானூர்திமலேசியாவானூர்தி