கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு லிட்டர் ரோன்97 பெட்ரோலின் விலை 5 காசு குறைந்துள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
மானியத்துக்குமுன் வழங்கப்படும் ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோலின் விலையும் 5 காசு குறைந்தது.
அதையடுத்து, ஒரு லிட்டர் ரோன்97 பெட்ரோல் 5.10 ரிங்கிட்டிற்கும் மானியத்துக்குமுன் வழங்கப்படும் ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோல் 4.62 ரிங்கிட்டிற்கும் விற்கப்படுகின்றன.
இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதிவரை மானியங்களுக்குமுன் வழங்கப்படும் ஒரு லிட்டர் டீசல் விலையும் 10 காசு குறைந்து 5.17 ரிங்கிட்டாக இருக்கும்.
ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தாலும் வட்டாரச் சந்தைகளில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் விநியோகம் மீண்டுவருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக நிதியமைச்சு தெரிவித்தது.
அக்டோபர் மாதத்துக்கான எரிபொருள் ஏற்றுமதிகளுக்கு சீனா மீண்டும் அனுமதி வழங்கியிருக்கிறது என்றும் வட்டாரச் சந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களைத் தென்கொரியா தொடர்ந்து விநியோகம் செய்கிறது என்றும் அமைச்சு சுட்டியது.
அவை, எரிபொருள் விநியோகத்தின்மீதுள்ள நெருக்கடியைக் குறைப்பதாக அது சொன்னது.
“இருப்பினும், சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் விநியோகத் தொடர்களில் இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். அத்துடன் பெட்ரோல் விலையும் அதிகரிக்கலாம்,” என்று நிதியமைச்சு சுட்டியது.
அனைத்துலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலிலிருந்து அரசாங்கம் தொடர்ந்து மக்களையும் வர்த்தகங்களையும் பாதுகாக்கும் என்று தெரிவித்த நிதியமைச்சு, 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்தபடி, எரிபொருள் மானியங்களுக்கென அரசாங்கம் 40 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும் என்றது.
மானிய விலையில் ரோன்95 பெட்ரோல் தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் என்பதையும் அது உறுதிப்படுத்தியது.
நாட்டின் எரிபொருள் விநியோம் தற்போதைக்குப் போதுமான அளவில் இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து சிக்கனத்துடன் அதைப் பயன்படுத்தும்படி மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியது.
