கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் 13 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அதனால் விரைவில் மலேசியாவில் சமூக ஊடக நிறுவனங்கள், eKYC எனப்படும் மின்னிலக்க வாடிக்கையாளர் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.
இந்தப் புதிய நடைமுறை நடப்புக்கு வந்தால் இளம் பிள்ளைகள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்த தகவலை மலேசிய தகவல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பிள்ளைகளை இணையத்திலிருந்து பாதுகாப்பதும் சமூக ஊடகங்கள் தங்களது சமூக விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதையும் மலேசியா கண்காணிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் இதுகுறித்து சமூக ஊடக நிறுவனங்களிடம் பேசியுள்ளதாகவும் அமைச்சர் ஃபாஹ்மி கூறினார்.
இந்தப் புதிய கட்டமைப்பு விதிமுறை எப்போது நடப்புக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.