கோலாலம்பூர்: தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் மியன்மாரை மீண்டும் முழுமையாக இணைக்க தமது அரசாங்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு இருநாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள மியன்மார் அதிபர் மின் ஆங் ஹிலெயிங்கை வியாழக்கிழமை (அக்டோபர் 8) சந்தித்த பின்னர் திரு அன்வார் இவ்வாறு கூறினார்.
2021ஆம் ஆண்டில் நடந்த ராணுவப் புரட்சிக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிபராகப் பொறுப்பேற்ற திரு ஹிலெயிங்கிற்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. மேலைநாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் அத்தேர்தலைப் போலியானது எனக் கடுமையாக விமர்சித்தன.
மியன்மாரில் ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. அமைதித் திட்டத்தைப் பின்பற்றத் தவறியதால் ஆசியான் உச்சநிலை மாநாடுகளில் பங்கேற்க மியன்மார் ராணுவ அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு திரு ஹிலெயிங், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்னாம் ஆகிய ஆசியான் நாடுகளுக்குச் சென்று உறவை மீண்டும் வலுப்படுத்த முயன்றார்.
மியன்மாரில் ஜனநாயகச் செயல்பாடுகள் குறித்துக் கவலைகள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்றும் திரு ஹிலெயிங் ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் மலேசியப் பிரதமர் கூறினார்.
மலேசியாவில் தங்கியுள்ள மியன்மார் குடிமக்கள் 10,493 பேரைத் திரும்ப அழைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டதற்காக மியன்மார் அதிபருக்குத் திரு அன்வார் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இனியும் அகதிகளை ஏற்க முடியாது என்றும் அவர்கள் நாட்டின் நிதிச்சுமையாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளனர் என்றும் மலேசியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனம், மனித உரிமை அமைப்புகளின் எச்சரிக்கையையும் மீறி மலேசியா கடந்த மாதம் 1,500 பேரைக் கப்பல்கள்மூலம் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
