மலேசிய அமைச்சரவை: சமய வழிகாட்டிக் குறிப்புகள் ஒப்புதல் பெறவேண்டும்

2 mins read
aa93c06e-d073-4f61-8e4f-89a9ca2364fe
புதன்கிழமை (பிப்ரவரி 5), மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் சமய விவகாரங்கள் பிரிவு அமைச்சர் நயிம் மொக்தார், பிற சமய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்குமுன், அவற்றின் ஏற்பாட்டாளர்கள் சமய அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிமுகம் செய்யத் திட்டமிடப்படுவதாக அறிவித்தார். - படம்: மலாய்மெயில்.காம்

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், நாட்டின் கொள்கைகள் அனைத்தும் தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை தருவனவாக அமையவேண்டியதும் அவை நடைமுறைக்கு வருமுன் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயம் என்று மறுஉறுதிப்படுத்தியுள்ளது.

பிற சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்துகொள்வது தொடர்பான வழிகாட்டிக் குறிப்புகளின் பரிந்துரை குறித்துக் கவலை எழுந்த வேளையில் அரசாங்கம் இவ்வாறு கூறியுள்ளது.

மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் சமய விவகாரங்கள் பிரிவு அமைச்சர் நயிம் மொக்தார், தேசிய ஒற்றுமைக்கான அமைச்சர் ஆரோன் அகோ டகாங் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) மறுஆய்வு செய்ததாகவும், குறிப்பாக அந்தப் பரிந்துரை தொடர்பான குழப்பம் பற்றி மறுஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (Jakim), முஸ்லிம்கள் பிற சமயங்களின் அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது குறித்த கவலைக்குப் பதிலளிக்கும் வண்ணம் அந்த வழிகாட்டிக் குறிப்புகளின் நகலை வரைந்துள்ளதாக அமைச்சர்கள் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

“இதனால் வெவ்வேறு இன, சமயங்களைச் சார்ந்த மலேசியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘ஜக்கிம்’ துறை முஸ்லிம்கள் அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாத்துக்கொள்வது குறித்து ஆலோசனை கூறலாமே தவிர, அத்தகைய ஆலோசனை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கொள்கையாகாது என்பதை அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது,” என்று அவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகள் சமயங்களுக்கு இடையிலான நல்லுறவைப் பாதிக்கும் என்ற கவலை எழுந்த வேளையில், மலேசிய அமைச்சரவை அந்தப் பரிந்துரைகளைக் கைவிட முடிவெடுத்திருப்பதாக சின் சியூ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் நயிம், ஆரோன் இருவரும் நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க அனைவரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கான குழு இந்த விவகாரம் தொடர்பில் ஆழமாக ஆராயும் என்றும் அவர்கள் கூறினர்.

பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகள் 24 பேரைக் கொண்ட அந்தக் குழு இம்மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்