மலேசிய அமைச்சரவை மாற்றங்கள்: பாஸ் அதிருப்தி

2 mins read
672f36ad-2e5e-46ae-8bac-10d0c263c7a9
பாஸ் தலைமைச் செயலாளர் டாக்கியுதீன் ஹசான். - கோப்புப் படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசிய அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அந்நாட்டின் பாஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சராக ஹன்னா யோவ் நியமிக்கப்பட்டது, அதே அமைச்சில் லோ சு ஃபூயை துணை அமைச்சராக நியமித்தது, வீடமைப்பு, உள்ளாட்சி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சுகளில் டிஏபி கட்சியினரைத் தக்கவைத்துக்கொண்டது போன்ற மாற்றங்களை பாஸ் தலைமைச் செயலாளர் டாக்கியுதீன் ஹசான் சாடினார்.

நகரங்கள், உள்ளாட்சி அரசாங்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைவர்களிடமோ ஓர் இனத்தவரிடமோ ஒப்படைப்பது, சமமின்மை, ஒரு சாராருக்கு அளவுக்கதிகமான அதிகாரம் வழங்குவது, மத்திய அரசாங்கத்தின் ஆட்சி முறையின் நோக்கம் போன்றவற்றின் தொடர்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, நியாயமான, தவிர்க்க முடியாத கேள்விகளை எழுப்பக்கூடும் என்று அவர் சொன்னார்.

இந்த நியமனங்கள், திறமை, கொள்கைகளைப் பொறுத்தவரையிலான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறவில்லை என்றும் அரசியல் நெருக்குதலாலும் கைமாறு எதிர்பார்த்தும் மேற்கொள்ளப்பட்டவை என்ற கருத்து பலரிடையே இருந்து வருவதாக திரு டாக்கியுதீன் கூறினார். இது கவலை தரும் ஒன்று என்றும் அவர் சொன்னார்.

அமைச்சரவை மாற்றங்கள் குறித்து அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அறிவித்திருந்தார். சாபா மாநிலத் தேர்தலில் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து திரு அன்வார் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்தார்.

மூத்த அம்னோ தலைவரும் முன்னாள் இரண்டாம் நிதி அமைச்சருமான ஜொஹாரி அப்துல் கனிக்குப் புதிய முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, பொருளியல் அமைச்சராக கெஅடிலானின் (பிகேஆர்) அக்மல் நசீரை நியமித்திருப்பது ஆகியவை அமைச்சரவை மாற்றங்களில் அடங்கும்.

கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சராக இருந்த ஸலைஹா முஸ்தபா, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த முகம்மது நா’யிம் மொக்தார் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டனர்.

கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். பள்ளி மாணவர்களின் இறப்பு, பகடிவதை போன்ற விவகாரங்களில் ஃபட்லினா சிடெக் சரிவர இயங்கவில்லை என்ற கருத்து நிலவியதால் பொதுமக்களிடையே அவர் பெரிய அளவில் கண்டனத்துக்கு ஆளாகியிருந்தார்.

இந்நிலையில், திரு அன்வார், தமது புதிய அமைச்சரவையுடன் புதன்கிழமை (டிசம்பர் 17) முதல் சந்திப்பை வழிநடத்தினார்.

குறிப்புச் சொற்கள்