கோலாலம்பூர்: மலேசியாவில் வாகன ஓட்டுநர்களுக்கு விதிக்கப்பட்ட 1.4 பில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை அந்த ஓட்டுநர்கள் இன்னும் செலுத்தவில்லை என்று சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அந்தத் தொகையை வசூலிக்க அரசாங்கம் சலுகையுடன் கூடிய கெடுவை விதித்துள்ளது.
அந்தக் கெடு முடிய இன்னும் 14 நாள்கள் உள்ளன. அதற்குள் அபராதத் தொகையைச் செலுத்த முன்வருவோருக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்படுவதே அந்தச் சலுகை.
அபராதத் தொகை பாக்கி குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ராம்லி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) விளக்கினார்.
“தவறு இழைத்த வாகன ஓட்டுநர்களுக்கு 4.9 மில்லியன் அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில், இன்றைய தேதி (டிசம்பர் 16) வரை 520,000 அபராதச் சீட்டுகளுக்கான 70 மில்லியன் ரிங்கிட்டை ஓட்டுநர்கள் செலுத்தி உள்ளனர்.
“இன்னும் அவர்கள் 1.4 பில்லியன் ரிங்கிட் பாக்கி வைத்துள்ளனர். அந்தத் தொகையை வசூலிக்க நவம்பர் 1ஆம் தேதி நடப்புக்கு வந்த இருமாத சலுகைத் திட்டம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
“வாகன ஓட்டுநர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். 2026 ஜனவரி 1 முதல் எந்தவொரு கழிவும் வழங்கப்படாது. அதனால், அவர்கள் முழு அபராதத் தொகையையும் செலுத்த வேண்டி வரும்,” என்று திரு ராம்லி தெரிவித்துள்ளார்.

