கோலாலம்பூர்: மலேசிய உற்பத்தியாளர்கள் சம்மேளனம், எல்லைத் தாண்டி பரவும் புகைமூட்டத்தைக் களைய தீர்க்கமான, வட்டார ரீதியான நடவடிக்கையை எடுக்கும்படி ஆசியான் அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து ஏற்படும் புகைமூட்டத்தால் பொதுமக்களின் சுகாதாரம், ஊழியர்களின் பாதுகாப்பு, பொருளியல் உற்பத்தி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அது எச்சரித்தது.
நாடு முழுவதும் கடுமையான புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், சம்மேளனம் அந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
மலேசியாவின் சுற்றுச்சூழல் துறை தரவுகளின்படி 68 தேசியக் கண்காணிப்பு நிலையங்களில் 38ல் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. அதில் சிரம்பான் பகுதி 186 எனும் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.
“தூய்மையான காற்று ஓர் ஆடம்பர பொருள் அல்ல. அது பொதுச் சுகாதாரம், பொருளியல் உற்பத்தித்திறன், நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கான அடிப்படை,” என்று மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டது.
தொடர்ந்து எழும் புகைமூட்டத்தால் ஊழியர்கள் வேலைக்குச் செல்வது தடைபடுவதுடன் திறந்த வெளி தளவாட, தொழிற்சாலை செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்று அது தெரிவித்தது.
புகைமூட்டத்திலிருந்து விடுபட சம்மேளனம், வட்டார அரசாங்கங்களுக்கு ஐந்து முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டியது.
ஆசியான் உறுப்பு நாடுகள் துணைக்கோளப் படங்களின் உதவியுடன் அவற்றின் கண்காணிப்பு, எச்சரிக்கைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும்.
இரண்டாவதாக, திறந்தவெளியில் சட்டவிரோதமாக தீ வைப்போர்மீது பாரபட்சமின்றி தண்டனைகளை விதிக்கவேண்டும்.
மூன்றாவதாக, பொறுப்புள்ள வட்டார ரீதியான விநியோகத் தொடர்களை அமைக்கும்படி சம்மேளனம் அழைப்புவிடுத்தது.
நான்காவதாக, நிதி, தூய்மையான தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றை ஆசியான் துரிதப்படுத்தவேண்டும்.
இறுதியாக, முன்னணி ஊழியரணியைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
புகைமூட்டம் இல்லாத ஆசியான் எட்டக்கூடிய இலக்காக இருக்கவேண்டுமே தவிர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விருப்பமாக இருக்கக்கூடாது என்று சம்மேளனம் சொன்னது.
