பாங்கி: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசியலமைப்பின் சாராம்சத்திலும் மாமன்னரின் முடிவிலும் அரசாங்கம் நிலைத்திருக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
எனினும், சட்டம், நாட்டு நலன் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதிலிருந்து அவை தம்மைத் தடுக்க முடியாது என்றார் அவர்.
மலேசியாவால் ஊழலைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதிலும் சொந்த ஆதாயத்துக்காக நாட்டின் சொத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்பதிலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.
“திரு நஜிப்பின் விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளைக் கலந்துரையாடும்போது, மத்திய அரசிலமைப்பின் சாராம்சத்தில் நான் நிலைநிற்கிறேன். ஆனால், ஒரு பிரதமராக சட்டத்துக்கு உட்பட்ட என் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதிலிருந்து அது என்னைத் தடுக்காது,” என்றார் அவர்.
மக்களின் கவனத்தை ஈர்த்த பிற அமைப்புகளின் விவகாரங்களையும் திரு அன்வார் சுட்டினார். லெம்பாகா டாபுங் ஹாஜி, மத்திய நில மேம்பாட்டு ஆணையம், 1எம்டிபி ஆகியவை அவற்றுள் அடங்கும்.
நாட்டின் சொத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுவோர் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாட்டின் சொத்தை எடுத்தவர்கள் அதற்குப் பதில் சொல்லவேண்டும். முடிவு எதுவாக இருந்தாலும் நாட்டைக் காப்பாற்றுவதிலிருந்து அது விலகிச் செல்லக் கூடாது,” என்றார் அவர்.
42 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவன நிதியை முறைகேடாகக் கையாண்டதற்காக 73 வயது திரு நஜிப், காசாங் சிறையில் தண்டனை காலத்தை நிறைவேற்றிவருகிறார்.
இம்மாதம் 18ஆம் தேதி, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், திரு நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கினார்.
திரு நஜிப் 50 மில்லியன் அபராதம் செலுத்தினால் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதிவரை எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் வீட்டிலிருந்து நிறைவேற்றலாம்.
