பட்டமளிப்பு விழாக்களில் மிதமிஞ்சிய கேளிக்கை கூடாது: மலேசிய அமைச்சர்

பட்டமளிப்பு விழாக்களில் மிதமிஞ்சிய கேளிக்கை கூடாது: மலேசிய அமைச்சர்

படம்: மலாய்மெயில்

29 Nov 2026 - 4:57 pm

2 mins read

கோலாலம்பூர்: பட்டமளிப்பு விழாக்களின் கல்விசார் முக்கியத்துவத்தையும் உண்மையான நோக்கத்தையும் சிதைக்கும் வகையில் அவற்றில் அளவுக்கு அதிகமான கேளிக்கை அம்சங்களை அனுமதிக்கக் கூடாது என மலேசியப் பொது, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாக்களில் இடம்பெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் கல்விச் சூழலுக்குப் பொருத்தமானவையாக இருக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் வலியுறுத்தினார். உயர்கல்வி நிலையங்களின் விழுமியங்கள், கண்ணியம், கல்வி மரபுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

“அறிவு, பட்டதாரிகள், அவர்களின் குடும்பத்தினர்க்கு அளிக்கப்படும் மரியாதையைக் குறைக்கும் வகையில் அதிகமான கேளிக்கையை இயல்பாக்கக் கூடாது,” என்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சியின் கண்ணியத்தைக் காக்க, பட்டமளிப்பு விழா ஏற்பாட்டு வழிகாட்டி நெறிமுறைகளைப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் திரு ஸாம்ப்ரி கேட்டுக்கொண்டார்.

பட்டதாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் சாதனைகளைக் கொண்டாட முழு உரிமை உண்டு என்றாலும், கொண்டாட்டங்கள் விழாவின் கண்ணியத்திற்கு ஏற்ப அமைய வேண்டும் என்றார் அவர்.

“பல்கலைக்கழகம் என்பது கல்வித் தகுதி பெற்ற பட்டதாரிகளை உருவாக்கும் இடம் மட்டுமன்று. மாணவர்களின் பண்பு, நடத்தை, ஆளுமை ஆகியவற்றை வடிவமைக்கும் நிறுவனமும் ஆகும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் கல்விச் சிறப்பு, அறிவுசார் முதிர்ச்சி, முன்மாதிரியான நடத்தை ஆகியவற்றின் அடையாளங்களாகப் பல்கலைக்கழகங்கள் திகழ, அவை நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளும் இவ்விழுமியங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பட்டமளிப்பு விழா என்பது பட்டம் வழங்கும் நிகழ்வு மட்டுமன்று; அது கல்விப் பயணத்தின் உச்சத்தையும் குடும்பங்களின் தியாகங்களையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் குறிக்கிறது என்பதைத் திரு ஸாம்ப்ரி சுட்டினார்.

இதற்கிடையே, அண்மையில் நடந்த தனது 23வது பட்டமளிப்பு விழாவில் இசை நிகழ்ச்சி பாணியிலான கேளிக்கை அங்கம் இடம்பெற்றதற்குக் கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (யூனிகேஎல்) சனிக்கிழமை மன்னிப்பு கோரியது.

கேளிக்கை அங்கங்கள் தொடர்பில் மாரா தலைவர் டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி துசுகி உட்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்பதாகவும், மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவில் மாராவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்