பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சுற்றுப்பயண, கலைகள், கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங்கிற்கும் அவரது அமைச்சுக்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலேசிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி ஒன்றில் மதுபானம் பரிமாறப்பட்டதாகவும் அவ்வாறு மீண்டும் செய்யக்கூடாது என்றும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகே மதுபானம் பரிமாறப்பட்டதாக அமைச்சு தந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று திரு அன்வார் கூறினார்.
இதற்கிடையே, அரசாங்கத்தின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு இனி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சுற்றுப்பயண, கலைகள், கலாசார அமைச்சு உறுதி அளித்தது.
நிகழ்ச்சிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிய, அவை மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று அமைச்சு கூறியது.
“நடந்த தவறு காரணமாக மலேசியர்களிடையே குழப்பம் அல்லது தவறான புரிதல் ஏற்பட்டிருந்தால், மிகுந்த தன்னடக்கத்துடனும் பொறுப்புணர்வுடனும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
“இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறோம். இத்தகைய ஒரு சூழல் மீண்டும் ஏற்படாதிருக்க கடப்பாடு கொண்டுள்ளோம். விதிமுறை, நெறிமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,” என்று அமைச்சு தெரிவித்தது.
‘குளோபல் டிராவல் மீட்’ இரவு விருந்தின்போது சர்ச்சை ஏற்பட்டது. மலேசிய சுற்றுப்புற, கலைகள், கலாசார அமைச்சரும் விருந்தினர்களும் மதுபானம் அருந்தியதைக் காட்டும் பல படங்கள் வெளியிடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, அரசு நிகழ்வில் மதுபானம் பரிமாறப்பட்டது குறித்து மலேசியர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அரசாங்க விதிமுறை மீறப்பட்டதாகவும் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்றும் குரல்கள் எழுந்தன.