மலேசியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு

1 mins read
56643bee-2ca8-4971-8c09-1c953efb4aac
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ‌ஷம்சுல் இஸ்கந்தர் முகம்மது அக்கினும் வர்த்தகர் ஆல்பர்ட் டேயும் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவர் என்று கூறப்படுகிறது. - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஹம்சுல் இஸ்கந்தர் முகம்மது அக்கின் மீது லஞ்சம் வாங்கியதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்கீழ் அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார். நீதிமன்றத்தில் திரு ‌‌ஷம்சுல் இஸ்கந்தர் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படுவதை மறுத்தார்.

வர்த்தகர் ஆல்பர்ட் டேய் ஜியான் செயிங்கின் நிறுவனங்கள், சாபாவில் கனிமவளங்களைத் தோண்டுவதற்கான உரிமங்களைப் பெறுவதற்கான ஒப்புதல் அளிப்பதற்காக அவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. திரு ‌ஷம்சுல் இஸ்கந்தர், 176,000 ரிங்கிட் (S$55,445) பெறுமான லஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதில் 140,000 ரிங்கிட் ரொக்கமாகவும் எஞ்சிய 36,000 ரிங்கிட், அறைகலன், மின் சாதனங்கள் போன்ற பொருள்களாகவும் தரப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

திரு‌ ‌ஷம்சுல் இஸ்கந்தர், 150,000 ரிங்கிட் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டார். மலேசியர்கள் இருவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவர் கடப்பிதழை வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

வழக்கு அடுத்த மாதம் (ஜனவரி 2026) 8ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்