கோலாலம்பூர்: அமெரிக்க டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மலேசியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையும் உலகளாவிய தொழில்நுட்ப வட்டத்தில் அந்நாடு மேற்கொண்டுள்ள ஒருங்கிணைப்பும் இதனை சாத்தியமாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வெளியிடப்பட்ட மதிப்பீட்டின்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு 0.3 விழுக்காடு அதிகரித்து 4.0938 மலேசிய ரிங்கிட் என விற்கப்பட்டது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் வரலாறு காணாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்து, ஆசியாவிலேயே மிகவும் சிறப்பாக வளர்ந்துள்ள நாணயமாகத் திகழ்கிறது.
அதே நாளில் சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட் 0.3 விழுக்காடு உயர்ந்து ஒரு வெள்ளிக்கு 3.1709 மலேசிய ரிங்கிட் என்று வலுவாக வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட அது 3.1 விழுக்காடு அதிகமாகும்.
வலுவான அடிப்படைகளைக் கொண்டு செயல்படுவதால் வட்டாரத்தில் உள்ள நாணயங்களைக் கடந்து ரிங்கிட் முன்னிலை வகிக்கிறது என்று மேபேங்க் வங்கியின் உத்திகளுக்கான ஆலோசகர் சக்தியாண்டி சுபாட் கருத்துரைத்தார்.
மலேசியாவில் வளரும் முதலீடுகள், நிதி சீர்த்திருத்தங்கள், முக்கிய தரவு மையமாக உருவெடுக்க அங்கு செய்யப்படும் கொள்கை மாற்றங்கள், இந்த நாணய வளர்ச்சிக்கான காரணங்கள் என்று வட்டார நிதிநிலைக்கான பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
மூன்றாம் காலாண்டில் மீண்டெழுந்த உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப மலேசியா மேற்கொண்ட ஏற்றுமதிகளும் இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தரவு நிலையங்களை கட்டியெழுப்புவதில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அக்டோபர் மாதம் மலேசியத் தொழிற்சாலைகள் அவற்றின் உற்பத்தியை முடுக்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
பதற்றத்தில் இருந்த அமெரிக்க, சீன பொருளியல் உறவு சற்று தணிந்துள்ளது மலேசியாவில் முதலீடு செய்வோரை வரவேற்றுள்ளது. அவ்விரு நாடுகளிலும் மலேசியா மிக அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.

