95 ரக பெட்ரோலைப் பயன்படுத்தும் வெளிநாட்டு வாகனங்கள் குறித்து தெரிவிக்க மலேசியர்கள் முன்வரவேண்டும்

1 mins read
502bcb66-dc21-4430-9326-0cab97ce1906
பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் எக்கியை, தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்யும் அதிகாரம் பெட்ரோல் நிலையக் காசாளர்களுக்கு உண்டு. - படம்: இபிஏ

பெட்டாலிங் ஜெயா: சலுகை விலையிலான ‘ரொன்95’ ரக பெட்ரோல் வெளிநாட்டு வாகனங்களில் நிரப்பப்படுவதைக் கண்டால், பெட்ரோல் நிலையக் காசாளர்கள் அல்லது அங்குள்ள ஊழியர்களிடம் உடனடியாகத் தெரிவிக்கும்படி மலேசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அங்கு நின்றபடியே படங்களையோ காணொளிகளையோ எடுப்பதற்குப் பதிலாக அவ்வாறு செய்யுமாறு அவர்களிடம் ஆலோசனை கூறப்படுகிறது.

பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் எக்கியை, தொலைவிலிருந்து செயலிழக்கச் செய்யும் அதிகாரம் பெட்ரோல் நிலையக் காசாளர்களுக்கு உண்டு என்று மலேசியப் பெட்ரோலிய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது.

“தற்போதைய சட்டங்களின்கீழ், சலுகை விலையிலான பெட்ரோலை வேண்டுமென்றே வாங்கும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்களுக்குத் தண்டனை கிடையாது,” என்று அது கூறியது.

“அதனால், ஓட்டுநர்கள் தொடர்ந்து அந்த பெட்ரோலைப் பயன்படுத்த முயற்சி செய்யும் நிலை ஏற்படுகிறது,” என்று சங்கம் சொன்னது.

“இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண, ஒன்றிணைந்து செயல்படுமாறு பொதுமக்களையும் அதிகாரிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மலேசியர்களின் பலனுக்காக, வரி செலுத்துவோரின் நிதி சரியான, நியாயமான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும்,” என்று சங்கம் கூறியது.

குறிப்புச் சொற்கள்