புத்ராஜெயா: மலேசியாவில் சென்ற ஆண்டு உயிருடள் பிறந்த குழந்தைகளின் பிறப்பு விகிதம் 4.5 விழுக்காடு குறைந்தது.
அந்நாட்டின் ஒட்டுமொத்தக் கருத்தரிப்பு விகிதம் குறைந்து ஒரு பெண்: 1.5 குழந்தைகள் என்றானது. நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துவருவதற்கு ஏற்ப இந்தப் புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளன.
மலேசியாவின் புள்ளிவிவரப் பிரிவு வியாழக்கிழமை (அக்டோபர் 15) இத்தகவல்களை வெளியிட்டது. சென்ற ஆண்டு அந்நாட்டில் 396,175 குழந்தைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை, 2024ல் பதிவான 414,918ஐக் காட்டிலும் 18,743 குறைவாகும்.
ஒவ்வோர் 1,000 பேருக்குமான சிபிஆர் (CBR) பிறப்பு விகிதக் குறியீடு 2024ல் பதிவான 12.2லிருந்து 2025ல் 11.6க்குக் குறைந்தது.
“எல்லா இனப் பிரிவுகளிலும் சிபிஆர் குறியீடு, 2024ல் பதிவானதைக் காட்டிலும் 2025ல் குறைந்தது. மலாய் இனத்தவரிடையேதான் ஒவ்வோர் 1,000 பேருக்குமான சிபிஆர் ஆக அதிகமாக 14.9ஆகப் பதிவானது. சீனர்களிடையே அவ்விகிதம் ஆகக்குறைவாக 5.0ஆகப் பதிவானது,” என்று மலேசிய புள்ளிவிவரப் பிரிவு அறிக்கை குறிப்பிட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
எல்லா மாநிலங்களிலும் பிறப்பு விகிதம் குறைந்தது. திரங்கானுவில்தான் சிபிஆர் குறியீடு ஆக அதிகமாக 18.7ஆகப் பதிவானது. பினாங்கில் ஆகக்குறைவாக 9.3ஆகப் பதிவானது.
2024ல் அவ்விகிதம் 1.6ஆக இருந்தது.
இந்நிலையில், நாட்டின் மரண எண்ணிக்கை 0.4 விழுக்காடு கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ல் 198,992ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 2025ல் 199,807ஆகப் பதிவானது.
2025ல் ஒவ்வோர் 1,000 மரணங்களுக்குமான சிடிஆர் (CDR) இறப்பு விகிதம் மாறாமல் 5.8ல் இருந்தது.
இந்தியர்களிடையேதான் சிடிஆர் விகிதம் ஆக அதிகமாக 8.2ஆகப் பதிவானது. மலாய் இனத்தவரிடையே அது 5.7ஆகப் பதிவானது. சீனர்களிடையே சிடிஆர் விகிதம் 2024ல் பதிவான 7.6ஐவிட சென்ற ஆண்டு 7.5ஆகக் குறைந்தது.
