கோலாலம்பூர்: அதிக மின்சாரத்தை நுகரும் தரவு மையங்களின் அதிவேகக் கட்டுமானம் காரணமாக, 2050ஆம் ஆண்டிற்குள் மலேசியாவின் மின்சாரத் தேவை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டில் 22.5 கிகாவாட்டாக இருக்கும் மின்சாரத் தேவை, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் (2050) 49.8 கிகாவாட்டாக உயரும் என்று எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 26) தெரிவித்தது.
2027ஆம் ஆண்டு மொத்த மின்சாரத் தேவையில் 11 விழுக்காடாக இருக்கும் தரவு மையங்களின் பங்கு, 2050ஆம் ஆண்டுக்குள் 21 விழுக்காடாக அதிகரிக்கும் என்று அந்த அமைச்சு கூறியது.
செயற்கை நுண்ணறிவுக்கான வட்டார மையமாகத் திகழ மலேசியா பெரும் திட்டங்களைக் கொண்டுள்ளது.
ஆரக்கிள், அமேசான் மற்றும் ஆல்பாபெட்டின் கூகல் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பல பில்லியன் டாலர் முதலீடுகளை மலேசியா ஈர்த்துள்ளது.
இதில் கூகல் நிறுவனம் அடுத்த ஈராண்டுகளில் மலேசியாவில் தனது தரவு மையம் மற்றும் மேகக் கணினி செயல்பாடுகளை விரிவுபடுத்த US$15 பில்லியன் (S$19 பில்லியன்) செலவிடத் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், தொழில்நுட்பப் பயன்பாடு மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மலேசியாவின் திட்டத்திற்குத் தடையாக அமையக்கூடும்.
தென்கிழக்காசியா வழியாக என்விடியா சில்லுகள் சீனாவுக்குக் கடத்தப்படுவதாக எழுந்துள்ள கவலைகள் காரணமாக, இந்த வட்டாரத்தில் உள்ள சில நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா.
அந்த நிறுவனங்களுக்கு இடமளிக்கவோ இடத்தை வாடகைக்கு விடவோ அல்லது சேவைகளை வழங்கவோ வேண்டாம் என்று தரவு மைய இயக்குநர்களிடம் அறிவுறுத்த மலேசியா உறுதியளித்துள்ளது.
அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, தனது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் சிலவற்றுக்குப் பதிலாக அணுமின் சக்தியைப் பயன்படுத்துவது குறித்து மலேசியா பரிசீலித்து வருகிறது.
இருப்பினும், இதனை 2040ஆம் ஆண்டில்தான் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜோகூரின் நிலை
இதற்கிடையே, தரவு மைய முதலீடுகள், குறிப்பாக நீர் மற்றும் மின்சார விநியோகம், அத்துடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான கவலைகள் குறித்து மாநில அரசு அறிந்திருப்பதாக ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காசி கூறியுள்ளார்.
“எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. ஜோகூருக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மக்களின் நலனை மாநில அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது,” என்றார் அவர்.
