நீதிமன்றத்தில் சத்தியம் செய்ததால் ஆடவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

2 mins read
da816c66-ea53-4172-b28c-7fac3f4870c3
50,000 திர்ஹமுக்கு மேலான தொகை என்பதால் ஆட்சான்றை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆவணச் சான்று தேவை என்பதைத் தற்காப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். - படம்: யுஏஇ ஊடகம்

அல் அய்ன்: தம் நண்பரிடமிருந்து கடன் வாங்கவில்லை என நீதிமன்றத்தில் சத்தியம் செய்ததை அடுத்து, 200,000 திர்ஹம் (S$72,775) கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டிலிருந்து ஆடவர் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் (யுஏஇ) அல் அய்ன் நகர நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) இடம்பெற்றது.

மூவாண்டுகளுக்குமுன் தம்மிடம் வாங்கிய 200,000 திர்ஹமையும் அதனை உரிய காலத்தில் திருப்பித் தராததால் தமக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளுக்காகவும் வழக்குச் செலவுகளுக்காகவும் மேலும் 50,000 திர்ஹமையும் தமக்குத் தரச்சொல்லி உத்தரவிட வேண்டும் என்று அந்த ஆடவரின் நண்பர் நீதிமன்றத்தை நாடினார்.

தாம் கடன் வழங்கியதற்குச் சான்றாக இன்னொருவரை அவர் முன்னிறுத்தினார். ஆனால், அதற்கான சட்ட அடிப்படையிலான ஆவணம் எதனையும் அவர் வழங்கவில்லை.

இந்நிலையில், “50,000 திர்ஹமுக்கு மேலான தொகை என்பதால் ஆட்சான்றை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆவணச் சான்று தேவை,” என உரிய சட்டப்பிரிவைக் குறிப்பிட்டு, அந்த ஆடவரின் சார்பில் முன்னிலையான தற்காப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அதனால், யுஏஇ சட்டம் பின்பற்றும் ஷரியா சட்டப்படி சத்தியம் செய்யும்படி அந்த ஆடவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

அதன்படி, “எல்லாம் வல்ல இறைவன்மீது ஆணையாக, வாதியிடமிருந்து நான் 200,000 திர்ஹம் பெறவில்லை. அதற்கு நான் பொறுப்பாளன் அல்லன். இறைவனே இதற்குச் சான்று,” என்று அந்த ஆடவர் சத்தியம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, வாதியின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நீதிமன்றக் கட்டணங்களையும் வழக்குக்கான செலவுகளையும் அவரே செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்