தோக்கியோ: பதின்ம வயதுச் சிறுமியைக் கடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆடவர், அச்சிறுமியை இணையத்தின்வழியாக தொடர்புகொண்டிருக்கலாம் என்று ஜப்பானியக் காவல்துறை கருதுவதாக சனிக்கிழமை (நவம்பர் 28) தெரிவித்துள்ளது.
அதே வேளையில் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்கள் குறித்தும் விசாரணை நடந்துவருவதாகவும் அது கூறியது. மியாகி மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அவற்றில் ஒன்று அக்டோபர் மாதம் காணாமல்போன அந்த 16 வயது மேல்நிலைப் பள்ளி மாணவியாக இருக்கக்கூடும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
மாணவியைக் கடத்திய சந்தேகத்தில் மகொடோ ஓகா என்ற 30 வயதுக்கும் மேற்பட்ட மியாகியின் ஒகவாரா பகுதியில் வசிக்கும் ஆடவரை நவம்பர் 18ஆம் தேதி காவல்துறை கைது செய்தது.
கண்டெடுக்கப்பட்ட இரு உடல்களையும் கூறாய்வுக்கு அனுப்பக் காவல்துறை திட்டமிடுகிறது. அந்த இரு உடல்களில் ஒன்றில் பாதியளவு எலும்புகளே மிஞ்சியுள்ளன.
காணாமல் போன அந்த மாணவியின் பெற்றோர் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அதற்கு முந்தைய நாள் அவளை ஒரு ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதோடு அவள் வீடு திரும்பவில்லை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கண்காணிப்புக் கேமராக் கருவிகளில் அவள் காஷிவா பகுதிக்கு ரயிலில் சென்றது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்விடம் சிபா மாநிலத்தில் உள்ளது. அவள் சந்தேக நபரை அங்கு சந்தித்து, மியாகி நகருக்கு ஆடவர் ஓட்டிய காரில் சென்றிருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது.
அந்தக் கார் ஷிச்சிகஷுக்கு என்ற நகரில் உள்ள மலைப்பகுதி நோக்கிச் சென்றுள்ளது. அங்குதான் அவ்விரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபரின் வீடு அம்மலைப் பகுதியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அவ்வீட்டுக்கு அந்த நபர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகக் குடிபுகுந்ததாக அருகில் வாழும் முதியவர் குறிப்பிட்டார்.
