பெட்டாலிங் ஜெயா: காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த இழுவை வண்டி ஓட்டுநர் ஒருவர், கோத்தா பாருவின் ஜாலான் குபாங் பாசுவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அந்த 31 வயது ஆடவருக்கு போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் தொடர்பில் முன்னதாக 24 குற்றச்செயல்கள் பதிவானதாக கிளாந்தான் காவல்துறைத் தலைமை ஆணையர் முகம்மது யூசோஃப் மாமாட் கூறியதாக ‘சினார் ஹரியான்’ தெரிவித்தது.
“மெலோரில் நடத்தப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கையில், ஆடவர் அவரது காரில் விரைந்து தப்பிச்சென்றபோது, அதிகாரிகள் அவரைத் துரத்தினர்.
“சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) காலை 5.30 மணிவாக்கில் சென்றடைந்ததும், அவர் வாகனத்திலிருந்து வெளியேறி அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். சுயத் தற்காப்புக்காக அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்,” என்றார் அவர்.
அந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் கொல்லப்பட்டார். காவல்துறையினர் சம்பவ இடத்தில் துப்பாக்கி, போலித் துப்பாக்கி, அரிவாள் ஆகியவற்றைக் கண்டெடுத்தனர்.
அதோடு, ஒரு பொட்டலம் புகையிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. அது சிறைக்குள் கடத்தி ல்வதற்கானது என்று காவல்துறை நம்புகின்றனர்.
இந்நிலையில், ஆடவரின் உடல், உடற்கூராய்வுச் சோதனைக்காக ‘தெங்கு அனிஸ்’ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

