சிலாங்கூர்: மலேசியாவில் டுரியான் பழ விற்பனையாளர் ஒருவர், தமது கடையிலிருந்து பகல் நேரத்தில் ஒரு முறை அல்ல, இருமுறை டுரியான்கள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாயினார்.
சிலாங்கூரின் பூச்சோங் பகுதியில் உள்ள தமது கடையில் அந்த விற்பனையாளர் டுரியான்களை விற்றுவருகிறார்.
சம்பவம் ஜூலை 27ம் தேதி நடந்தது. அதன் தொடர்பிலான காணொளி ஒன்றை, அந்தக் கடைக்காரர் சீன சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
அந்தக் காணொளியில், ஆடவர் ஒருவர் டுரியான் பழங்களை எடுத்து வெள்ளை மூட்டை ஒன்றில் போடுவதைக் காணமுடிகிறது. டுரியான் பழங்களின் விலை ஒரு கிலோகிராமுக்கு 65 ரிங்கிட்.
அவை ஆக அதிக விலையுயர்வான ‘முசாங் கிங்’ வகையைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது.
அதன் பிறகு, அந்த ஆடவர் அமைதியாக அவ்விடத்தைவிட்டு வெளியேறி டுரியான் மூட்டையுடன் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.
அந்த ஆடவர் அதே செயலைச் செய்வதற்காக மீண்டும் கடைக்குத் திரும்பியதாக கடைக்காரர் கூறினார்.
‘‘நல்ல வேளை யாருக்கும் காயம் ஏற்படவில்லை,’’ என்றார் அவர். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

