திருமணப் பாலியல் துன்புறுத்தலால் தெற்காசிய மனைவிகள் பலருக்குப் பாதுகாப்பில்லை: ஆய்வு

திருமணப் பாலியல் துன்புறுத்தலால் தெற்காசிய மனைவிகள் பலருக்குப் பாதுகாப்பில்லை: ஆய்வு

படம்: கெட்டி இமேஜஸ்

27 Nov 2026 - 6:59 pm

2 mins read

திருமணப் பாலியல் துன்புறுத்தலை முழுமையாகக் குற்றமாக்கத் தவறியதால், எட்டுத் தெற்காசிய நாடுகளில் மில்லியன்கணக்கான பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அப்பகுதிகளில் நெருங்கிய இணையரால் ஏற்படும் வன்முறை உலகளாவிய சராசரியைவிட 35 விழுக்காடு அதிகமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டது. 100க்கும் மேற்பட்ட நாடுகள் திருமணப் பாலியல் துன்புறுத்தலைத் தடைசெய்துள்ளபோதும், இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகள், இன்னும் அவ்வாறு செய்யாத கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலில் நீடிக்கின்றன.

திருமணத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு, மற்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு இணையான தண்டனை வழங்கப்படும் ஒரே தெற்காசிய நாடு மாலத்தீவு மட்டுமே.

நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகள் திருமணப் பாலியல் துன்புறுத்தலைக் குற்றமாக்கியுள்ளபோதும், அதற்குக் குறைவான தண்டனையையே வழங்குகின்றன என்று அப்பகுதியில் உள்ள மகளிர் உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான ‘சமாஜ்’ நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் திருமணப் பாலியல் துன்புறுத்தல் சட்டங்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து உருவானவை என்று ‘சமாஜ்’ கூட்டமைப்பின் ஓர் அங்கமான ‘இக்குவாலிட்டி நவ்’ என்ற உலகளாவிய மகளிர் உரிமை அமைப்பைச் சேர்ந்த ரஞ்சிதா சில்வால் கூறினார்.

இந்தியாவிலும் பங்ளாதேஷிலும் 1860ஆம் ஆண்டிலும் இலங்கையில் 1885ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்ட அச்சட்டம், பாலியல் துன்புறுத்தலுக்கான விதிவிலக்குகளைப் பட்டியலிடுகிறது. அதில் ஓர் ஆண் தனது மனைவியுடன் கொள்ளும் உடலுறவும் அடங்கும்.

அந்தச் சட்டம் காலாவதியானது என்றும் குற்றவாளி யாராக இருந்தாலும் கட்டாய உடலுறவு என்பது பாலியல் துன்புறுத்தல்தான் என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருமணத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் பெண்களின் உடல், உளவியல், உணர்வுபூர்வ, பாலியல் ரீதியான நலனைப் பாதிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
பாலியல்துன்புறுத்தல்திருமணம்