கோலாலம்பூர்: மலேசிய சீனர் சங்கம் (மசீச) அதன் பொதுக்கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதன் தலைமையகத்தில் நடத்தியது.
அந்தக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள், ஆளும் அன்வார் இப்ராகிமின் அரசாங்கத்தின் அங்கமாக உள்ள ஜனநாயகச் செயல் கட்சியுடன் (டிஏபி) ஒத்துழைப்பதை நிறுத்திக்கொள்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
வரப்போகும் 2028ஆம் ஆண்டுக்குள் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கட்சியின் தலைவர் வி கா சியோங் முன்னிலையில் உறுப்பினர்கள் வாக்களித்து உறுதிப்படுத்தினர்.
ஜனநாயகச் செயல் கட்சி, பிரதமர் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஆக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மலேசிய சீனர்களைப் பிரதிநிதிக்கும் இரு கட்சிகளாக ஜனநாயகச் செயல் கட்சியும் மலேசிய சீனர் கட்சியும் விளங்குகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. நாட்டுநலன் கருதி மலேசிய மாமன்னரின் வேண்டுகோளின்படி தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) அமைப்பில் உள்ளடங்கிய அம்னோ, மசீச, டிஏபி போன்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமைக் கூட்டணியுடன் ஆட்சியமைக்க முன்வந்தன. மலேசியாவின் பல கட்சிகள் அதில் அங்கம் வகிக்கின்றன.
பிரதமர் அன்வார் பக்கத்தான் ஹரப்பான் கட்சியின் தலைவரும் ஆவார். அவரது கட்சியுடனும் டிஏபியுடனும் அடுத்த பொதுத் தேர்தலில் துணைப் பிரதமர் சாஹிட் ஹமிடி தலைமையிலான பாரிசான் நேஷனல்ர திரு அன்வாரின் அரசாங்கக் கூட்டணியைத் தொடர்ந்தால் தான் அதில் இடம்பெறுவதில் சந்தேகத்தை மசீச எழுப்பியுள்ளது.
அதற்கு தற்போதைய அரசாங்கத்தில் பல அமைச்சர்களைக் கொண்ட டிஏபி கட்சியின் பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணம் என்று மசீச கூறியுள்ளது. மேலும் தலைமைத்துவ திறன் இல்லாத கல்வி அமைச்சர் பட்லினா சிடெக் பதவி விலகவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“ஆட்சிக்கு வந்ததுமுதல் டிஏபியும் பக்கத்தானும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவகாரங்களைத் திசைதிருப்பியுள்ளன. மக்களுக்கும் அவர்களின் சொந்தக் கட்சிக் கொள்கைகளுக்குமே அக்கட்சியினர் விரோதமாக நடந்துள்ளனர்,” என்று மசீச தலைவர் வி கா சியோங் குறிப்பிட்டார்.

