தட்டம்மை மரண எண்ணிக்கை பங்ளாதேஷில் 500பேரைக் கடந்தது

தட்டம்மை மரண எண்ணிக்கை பங்ளாதேஷில் 500பேரைக் கடந்தது

2 mins read
குறைவான தடுப்பூசி நடவடிக்கை பெரிய அளவு தொற்றுப் பரவலை ஏற்படுத்திவிட்டது
3ddc92af-a1e9-4b58-8fed-9cf6d755aaf8
தலைநகர் டாக்காவில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் தட்டம்மை தொற்றிய குழந்தையுடன் தாய். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதேஷில் வரலாறு காணாத அளவில் தட்டம்மை நோய் பரவிவருவதால், உலகச் சுகாதார அமைப்பு அதனை உடனே விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமருக்கான சிறப்பு ஆலோசகர் இதனை உறுதிப்படுத்தினார். இவ்வாண்டு மட்டும் தொற்றினால் பாதிக்கப்பட்டு 86 குழந்தைகளும், தொற்றின் அறிகுறிகளுடன் 426 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (மே 23) காலைவரை 13 குழந்தைகளின் மரணம் உறுதிசெய்யப்பட்டதால் தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை மாண்டோர் எண்ணிக்கை 512ஐ எட்டியது.

“நாங்கள் உலகச் சுகாதார அமைப்பினை (WHO) தொடர்புகொண்டு, மார்ச் மாதம் முதல் ஏன் தொற்று இந்த அளவு பரவியது என்பதை விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டோம்,” என்று சுகாதார விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சியாவுடின் ஹைதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகச் சுகாதார அமைப்பு நேர்மறையான பதிலை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய மாதங்களில் தொற்று வெகு தீவிரமாகப் பங்ளாதேஷின் பல பகுதிகளில் பரவிவருகிறது. மார்ச் 15ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரையில் ஏறத்தாழ 62,507 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்று சந்தேகிக்கப்பட்டது. அவர்களில் 8,494 பேருக்கு ஆய்வகச் சோதனைகள் மூலமாக தொற்று உறுதியானது.

நாடெங்கும் தட்டம்மை நோயால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் பெருகிவிட்டது. சுகாதாரக் கட்டமைப்புகள் அவர்களைக் கையாளத் தடுமாறி வருகின்றன.

ஐக்கிய நாட்டு அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு (UNICEF) ஏற்கெனவே இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த பங்ளாதேஷ் தற்காலிக அரசாங்கத்திடம் நோய் குறித்த எச்சரிக்கையை விடுத்திருந்தது.

இதனை அந்த அமைப்பின் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தட்டம்மை தொற்று மோசமடையும் என்று ஐந்து எச்சரிக்கைக் கடிதங்கள் முகம்மது யுனோஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே தொற்றையும் அதனால் ஏற்படும் மரணத்தையும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கும் பாதியளவே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் ஆபத்து அதிகம்.

குறைந்து வந்த தடுப்பூசி நடவடிக்கைகள் பெரிய அளவு தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்திவிட்டது என்று உலகச் சுகாதார அமைப்பு ஏப்ரல் மாதம் தெரிவித்தது.

அதிலிருந்து பங்ளாதேஷ் அரசாங்கம் அதன் அவசரகாலத் தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நாடெங்கும் இளம் குழந்தைகளைக் குறிவைத்து விரிவாக்கியது.

குறிப்புச் சொற்கள்