ஆட்சியாளர்கள் விலக்குரிமைத் திருத்தத்தை மறுஆய்வு செய்க: மஇகா

ஆட்சியாளர்கள் விலக்குரிமைத் திருத்தத்தை மறுஆய்வு செய்க: மஇகா

படம்: ஃபிரீ மலேசியா டுடே

28 Nov 2026 - 5:02 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மலாய் ஆட்சியாளர்களின் சட்ட விலக்குரிமை தொடர்பாக 1993ஆம் ஆண்டு செய்யப்பட்ட அரசமைப்புத் திருத்தங்களை மறுஆய்வு செய்யுமாறு மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கோரிக்கை விடுத்துள்ளது.

இம்மாற்றங்களுக்கு ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஒப்புதல் அந்த மாற்றம் செய்யப்பட்டபோது முறையாகப் பெறப்படவில்லை என்று மஇகா வாதிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டிலும் இதே கோரிக்கையை முன்வைத்த மஇகா தலைவர் எஸ். விக்னேஸ்வரன், ஆட்சியாளர்களின் சிறப்புரிமைகளைப் பாதிக்கும் சட்டங்களுக்கும் குறிப்பிட்ட அரசமைப்புப் பிரிவுகளின் திருத்தங்களுக்கும் ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்று கூட்டரசு அரசமைப்பின் 38, 159 ஆகிய பிரிவுகள் வலியுறுத்துவதாகக் கூறினார்.

ஆனால், ஆட்சியாளர்கள் மன்றம் அம்மசோதாவை நிராகரித்ததாக ஆட்சியாளர்கள் முத்திரைக் காப்பாளரிடமிருந்து கடிதம் வந்ததை 1993 ஜனவரி 18ஆம் தேதி அன்றைய மக்களவை நாயகர் அவையில் தெரிவித்ததாக நாடாளுமன்றப் பதிவேடுகள் காட்டுகின்றன.

ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஒப்புதலின்றி மசோதாவை நிறைவேற்றிய பிறகு அதன் மறுநாளும் அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது; இருப்பினும் திருத்த நடைமுறைகள் தொடர்ந்தன என்றார் அவர்.

ஜோகூரில் கட்சியின் 80ஆவது பொதுப்பேரவையைத் தொடங்கிவைத்துப் பேசிய திரு விக்னேஸ்வரன், இவ்விவகாரம் தீவிரக் கவனத்திற்கு உரியது என்றார். ஆட்சியாளர்களுக்கு முழுமையான அதிகாரத்தை மீண்டும் வழங்க மஇகா கோரவில்லை; மாறாக, கூட்டரசு அரசமைப்பில் வரையப்பட்டுள்ள மூல ஒப்புதலையும் உடன்பாட்டையும் மதிக்குமாறே வலியுறுத்துகிறது என்றார்.

அன்றைய அரசாங்கத்தை விடக் கூட்டரசு அரசமைப்பு உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், எந்தப் பெரும்பான்மையும் அரசமைப்புக்கு அப்பாற்பட்டதன்று என்றும், எந்தவோர் அரசமைப்புப் பாதுகாப்பும் விருப்பத்திற்குரியதாகக் கருதப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1993ஆம் ஆண்டு திருத்தம் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து ஆட்சியாளர்களுக்கு இருந்த தனிப்பட்ட விலக்குரிமையை நீக்கிச் சிறப்பு நீதிமன்றத்தை நிறுவியது.

திருத்தப்பட்ட மசோதா மார்ச் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் நிறைவேற்றப்பட்டது; 1993 மார்ச் 30ஆம் தேதி அது நடப்புக்கு வந்தது. இறுதித் திருத்தங்களுக்கு ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டதா என அரசமைப்புச் சட்ட அறிஞர் ஷாத் சலீம் ஃபாரூக்கியும் முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்