தபாயின்/மியன்மார்: மத்திய மியன்மாரின் தபாயின் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகளும், மீட்புப் பணியாளரும் இரு குடியிருப்பாளர்களும் ஏஎஃப்பி ஊடகத்திடம் சனிக்கிழமை (டிசம்பர் 6) தெரிவித்துள்ளனர்.
ராணுவ அரசாங்கத்தை எதிர்க்கும் போராளிகளை அழிப்பதற்கு அடிக்கடி விமானத் தாக்குதல்கள் நடக்கின்றன. அவற்றில் பொதுமக்கள் மரணமடைவது வழக்கமாகிவருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தினருக்கும் அவர்களை எதிர்க்கும் பல போராளி அமைப்புகளுக்கும் உள்நாட்டுப் போர் அன்றிலிருந்து தொடர்ந்துவருகிறது.
சகாயிங் வட்டாரத்தில் உள்ள தபாயின் நகரில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு குண்டுகள் போடப்பட்டதாக உள்ளூர் அதிகாரி கூறினார். பலர் ஒன்றுகூடியிருந்த தேநீர் கடையில் அவற்றில் ஒன்று விழுந்துள்ளது.
அந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயமுற்றதாகவும் அவர் தெரிவித்தார். ஊடகத்திடம் பேசிய அனைவரும் அடையாளத்தை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
மீட்புப் பணிக்கு 15 நிமிடத்தில் அங்கு வந்த ஒருவர், குண்டு விழுந்த இடத்திலேயே ஏழு பேர் இறந்துவிட்டதாகவும் மேலும் 11 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
ராணுவ அரசாங்கத்தில் இருந்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. கடந்த மே மாதம் நிலநடுக்கத்தால் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தும் ராணுவ அரசாங்கம் இதே சாகாயிங்கில் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

