சிட்னி: ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் ஈராண்டுகளுக்கும் மேல் காணாமற்போயிருக்கும் ஒரு பெல்ஜிய பெண்ணின் கைப்பேசி கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அப்பெண்ணைத் தேடுவதற்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளில் தாங்களும் பங்கேற்கப்போவதாக காவல்துறை கூறியுள்ளது. காணாமற்போன சலீன் கிரெமர் எனும் பெண்மணியின் குடும்பத்தாரும் நண்பர்களும் ‘பிலோசஃபர் ஃபால்ஸ்’ (Philosopher Falls) பகுதிக்கு அருகே இந்த வார இறுதியில் தனிப்பட்ட தேடலுக்குத் திட்டமிட்டிருந்தனர்.
அப்பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பெண் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் காணாமற்போனார். அதற்கு சில நாள்களுக்குப் பிறகு பெண்ணின் கார் இருந்ததைக் காவல்துறை கண்டுபிடித்தது.
பல தேடல்களுக்குப் பிறகும் பெண்ணைக் காணவில்லை.
முன்பு தேடப்பட்ட பகுதியில் காவல்துறையினர் கைப்பேசி ஒன்றை சனிக்கிழமை (டிசம்பர் 13) கண்டெடுத்தனர். அந்தக் கைப்பேசி, கிரெமருக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்தக் கைப்பேசி மீது தடயவியல் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக டாஸ்மேனியா காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது. தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் தேடல் நடவடிக்கைகளில் தாங்கள் அதிகாரபூர்வமாகப் பங்கேற்கப்போவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
“அடர்த்தியான இந்தப் பகுதியில் அவர் கைப்பேசியைத் தொலைத்துவிட்டு அது இல்லாமலேயே தொடர்ந்து சென்றிருப்பார் என்று சந்தேகப்படுகிறோம்,” என்று காவல்துறை குறிப்பிட்டது.

