அபுஜா: மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடம் ஒன்றிலிருந்து 200க்கும் அதிகமான மாணவர்களைத் துப்பாக்கிக்காரர்கள் சிலர் கடத்தியுள்ளனர்.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அத்தகைய கடத்தல் சம்பவம் நைஜீரியாவில் நிகழ்ந்துள்ளது.
நைஜர் மாநிலத்தின் பாப்பிரியில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளிக்கூடத்திலிருந்து 215 மாணவர்களும் 12 ஊழியர்களும் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அதிகரிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூடும்படி அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தும் செயின்ட் மேரிஸ் பள்ளி தொடர்ந்து வகுப்புகளை நடத்தியது.
நைஜீரியாவில் அண்மை நாள்களாக ஆயுதமேந்திய குழுக்களின் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை 20க்கும் மேற்பட்ட மாணவிகள், கெபி மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்திலிருந்து கடத்தப்பட்டனர்.
குவாரா மாநிலத்தில் தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டதில் இருவர் மாண்டனர்; 38 பேர் கடத்தப்பட்டனர்.
கொள்ளைக்காரர்கள் என்று அறியப்படும் துப்பாக்கிக்காரர்கள் சிலர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) செயின்ட் மேரிஸ் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து மாணவர்களை அவர்களின் தங்குவிடுதிகளிலிருந்து கடத்திச் சென்றதாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவர்கள் பாதுகாப்பாக வீடு வந்து சேரவேண்டும் என்று பெற்றோர் பலர் தவித்துவருகின்றனர்.

