ஜெனிவா: சூடானில் உள்ள ஒரு மருத்துவமனை மீது கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேற்கு கோர்டோஃபானில் உள்ள அல் முஜ்லாத் மருத்துவமனை மீது சனிக்கிழமை தாக்குதல் நடந்தது. 2023 ஏப்ரல் மாதம் மோதல் வெடித்ததில் இருந்து சூடான் ராணுவமும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளும் சண்டையிட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியசுயஸ், இதற்கு யார் பொறுப்பு என்று சொல்லாமல், சுகாதார உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இத்தாக்குதலில் ஆறு குழந்தைகள் மற்றும் ஐந்து மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் சூடான் அலுவலகம் தெரிவித்தது. மேலும் அந்த இடத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அவசரகால வழக்கறிஞர்கள்’ எனும் மனித உரிமைகள் குழு, சனிக்கிழமை மருத்துவமனையை ராணுவ ஆளில்லா வானூர்தி தாக்கியதாகக் குற்றம் சாட்டினர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இறப்பு எண்ணிக்கை ஒன்பது என்று தெரிவிக்கப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

