குடிநுழைவு அலுவலகங்களில் நீண்ட வரிசைகளைக் குறைக்க கூடுதல் சேவைகள் மின்னிலக்கமயம்

2 mins read
bb3ea21f-c270-42e4-81b9-5bd2e0caa861
குடிநுழைவுத் துறையின் சேவை விநியோகத்தை மேம்படுத்த பல முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: மலாய் மெயில்

புத்ராஜெயா: பொதுமக்கள் இன்னும் ஆற்றல்மிகுந்த, வேகமான, பயனாளர்களுக்கு உகந்த சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய, குடிநுழைவுத் துறை தனது சேவைகளை மாற்றியமைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அதன் தலைமை இயக்குநர் ஸக்கரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுத் துறையின் சேவை விநியோகத்தை மேம்படுத்த பல முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் சனிக்கிழமை (டிசம்பர் 6) அவர் சொன்னார்.

அனைத்து நிலைகளிலும் ஒரு விரிவான மின்னிலக்கமயமாதல் திட்டத்தைத் தொடர்ந்து வெளியிடுவதும் இதில் உள்ளடங்கும்.

குடிநுழைவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தற்போது பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கி வருவதை திரு ஸக்கரியா சுட்டினார். குறிப்பாக, அதன் முக்கியச் சேவைகளை மின்னிலக்கமயமாக்குவதன் மூலம் இந்தப் பலன்கள் கிடைப்பதாக அவர் கூறினார்.

“சேவைகளைப் பெறுவதற்காக மக்கள் காலையிலேயே வரிசையில் நிற்கத் தேவையில்லாத வகையில், செயல்முறைகளை எளிதாக்குவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மின்னிலக்க வரிசை முறை பொதுமக்களுக்கான செயல்முறையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், கடப்பிதழ் முகப்புகளில் நெரிசல், வரிசை எண்கள் தொடர்பான தகராறுகளையும் வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது என்றார் திரு ஸக்கரியா.

“இப்போது நாம் குடிநுழைவு அலுவலகங்களுக்குச் சென்றால், குறிப்பாக, கடப்பிதழ் முகப்புகளில் வரிசை எண்களுக்காக மக்கள் முண்டியடிக்கும் அல்லது சண்டையிடும் பிரச்சினை இருக்காது.

“இவை நாங்கள் செயல்படுத்திய மாற்றங்களில் சிலவாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பொதுச் சேவை விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இலக்குகளுக்கு இணங்க, எதிர்காலத்தில் சேவைகளின் மின்னிலக்கமயத்தை மேலும் விரிவுபடுத்த பல புதிய நடவடிக்கைகள் குறித்தும் குடிநுழைவுத் துறை ஆராய்ந்து வருவதாகத் திரு ஸக்கரியா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்